×

டிஎன்பிஎல் ரயில்வே கேட் அருகே சுரங்க வழி பாதை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

வேலாயுதம்பாளையம்: டிஎன்பிஎல் ரயில்வே கேட் அருகில் சுரங்கப்பாதை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தற்போது புதிய நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பகுதி புகளூர் நகராட்சியாகும். இந்த நகராட்சியில் சுமார் 26 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகராட்சிக்கு பெருமை சேர்க்கும் முக்கிய அங்கமாக வகிப்பது தமிழ்நாடு காகித ஆலையாகும். இந்த ஆலைஅருகில் புகளூர் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே லைன் வழியாக தினசரி 60க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன.

காகித ஆலைக்கு தினசரி 600 முதல் 900 வரையிலான கனரக வாகனங்கள் ஆலைக்குத் தேவையான மூலப்பொருட்களான, கரும்புச்சக்கை, சவுக்கு கட்டை, கருவேலம்பட்டைகள், தைல மரக் கட்டைகள் மற்றும் ஆலையில் தயார் செய்யப்படும் பேப்பர் மற்றும் சிமெண்ட் வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் லாரி மூலம் கொண்டு செல்ல வந்து செல்கிறது. இதனால் வேலாயுதம்பாளையம் புன்னம்சத்திரம் பகுதியிலான சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். ரயில்வே கேட் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் நடந்து செல்ல வசதியாகவும், மழைக்காலங்களில் அப்பகுதியில் பெய்யும் மழை நீர் செல்வதற்காகவும் ரயில்வே லைன் அமைத்த பொழுது சிறிய அளவிலான குகைவழிப்பாதை பயன்பாட்டில் உள்ளது.

கடந்த 11 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் தற்போது வேலாயுதம்பாளையம் பகுதியில் கனரக வாகனம் அதிகமாக பெருகி உள்ளது. அதேபோல் இருசக்கர மற்றும் நான்கு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. புகளூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில்வே ரயில் மற்றும் சரக்கு வாகனம் கடப்பதற்காக கேட் அடைக்கப்படும் போது, கனரக வாகனம் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனம் படையெடுத்து அணிவகுப்பாக இருக்கும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது.

எனவே இதைக் கருத்தில் கொண்டு நீண்ட நேரம் பொதுமக்கள் ரயில்வே கேட் அருகே காத்திருப்பதை தவிர்க்க குகைவழிப்பாதையை சிறிய கார்கள் செல்வதற்கு வசதியாக மாற்றி அமைத்தால் பொது மக்களுக்கு வசதியாக இருக்கும் இதை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் செயல்பட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post டிஎன்பிஎல் ரயில்வே கேட் அருகே சுரங்க வழி பாதை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : TNPL ,Velayuthampalayam ,Pugalur Municipality ,Karur district ,Dinakaran ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்