×

மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது

தர்மபுரி, மார்ச் 17: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து 30 கண்காணிப்பு குழு மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும்படை குழுவினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாந்தி தலைமை வகித்து கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தேதியை வெளியிட்டதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று (16ம்தேதி) மாலை முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடித்து, நாடாளுமன்ற பொதுத்தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பணிகள் முடிந்த பின்னரே நடத்தப்படும். அதுவரை பொதுமக்கள் தங்களது மனுக்களை, கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறை தீர்க்கும் மனுக்கள் பெட்டியில் இடலாம். தேர்தல் நடத்தை விதிகளின்படி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில், பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், போஸ்டர் ஒட்டுதல், சுவரில் எழுதுதல் கூடாது.

கிராமப்புறங்களில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதற்கு, சம்மந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதி அளிக்கும் பட்சத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விளம்பரம் செய்யலாம். தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள், பொதுக்கூட்டங்களை நடத்தவும், வாகனங்களை பயன்படுத்தவும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டதை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் அவர்களது படைக்கலன்களை, அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் படைக்கலன்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை தடை செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், மொத்தம் 15 லட்சத்து 12 ஆயிரத்து 732 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 32,535 வாக்காளர்கள் 18 முதல் 19 வயதிற்குட்பட்ட வாக்காளர்கள் ஆகும். 3 லட்சத்து 11 ஆயிரத்து 422 வாக்காளர்கள் 20 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களாகவும், 114 வாக்காளர்கள் 100 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர். 13,367 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாகவும், 176 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தனவர்களாகவும் உள்ளனர். 13,394 வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 1905 வாக்காளர்கள் சர்வீஸ் ஓட்டர்ஸ்களாவும் உள்ளனர். மேலும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 1805 வாக்குச்சாவடிகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்கவும், மாவட்டம் முழுவதற்கும் 15 பறக்கும்படை குழுக்களும் மற்றும் 15 நிலையான கண்காணிப்பு குழுக்களும் என மொத்தம் 30 குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.

தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் 11,660 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள சி விஜில் அப்பு செயலியிலும் புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் பெறப்படும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை elections2024.dpi@gmail.com mailto:elections2024.dpi @gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7017 மற்றும் வாட்ஸ் அப் குறுந்தகவல் மூலம் தொடர்பு கொள்ள 9363754335 என்ற எண்ணுள்ள கைபேசியும் 24 மணி நேரமும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் கௌரவ்குமார், டிஆர்ஓ பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் பிரியா, மேட்டூர் சப் கலெக்டர் பொன்மணி, உதவி தேர்தல் அலுவலர்கள், தனி தாசில்தார் (தேர்தல்) அசோக்குமார், அனைத்து தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...