×

சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி தீவிரம்

தர்மபுரி, மார்ச் 17: தர்மபுரி மாவட்டத்தில் வறட்சியை தாங்கி வளரும் மரவள்ளியை, விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் சாகுபடி செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி, பாலக்கோடு, மொரப்பூர், காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட வட்டாரங்களில் அதிகளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு சாகுபடி செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளுக்கு வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பெய்யாததால், கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சியை தாக்குப் பிடித்து வளரும் மரவள்ளியை, சொட்டுநீர் பாசனத்தின் மூலம் விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ’தர்மபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால் வறட்சியை தாங்கி வளரும் மரவள்ளியை, சொட்டுநீர் பாசனத்தின் மூலம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மரவள்ளிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. பராமரிப்பு செலவு குறைவு. கடலை, சின்ன வெங்காயம், உளுந்து போன்றவற்றை ஊடு பயிராகவும் பயிரிடலாம். 8 முதல் 10 மாதங்களில் மரவள்ளி கிழங்கை அறுவடை செய்யலாம். ஒரு செடிக்கு 4 முதல், அதிகபட்சமாக 7 கிலோ வரை கிழங்கு கிடைக்கும். ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை கிடைக்கும். தற்போது வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ மரவள்ளி ₹26க்கு விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.

The post சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Palakodu ,Morapur ,Karimangalam ,Nallampally ,Papriprettipatti ,Arur ,
× RELATED தர்மபுரி அருகே மாஜி ராணுவ வீரர் மர்மச்சாவு உடலை மீட்டு விசாரணை