×

பட்டிவீரன்பட்டி சித்தரேவில் நெல் கொள்முதல் பணி துவக்கம்

பட்டிவீரன்பட்டி, மார்ச் 17: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராம பகுதியில் உள்ள நெல் விவசாயிகள் ஏ.டி.டி 45, ஏ.டி.டி 51, கோ 43 போன்ற சன்னரக நெல் ரகங்களை பயிர் செய்து வருகின்றனர். இவை தற்போது விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகளிடம் இடைத்தரகர்களில் தலையீடு இன்றி நேரடியாக நெல்லை கொள்முதல் செய்வதற்காக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 5 ஆண்டுகளாக கட்டிட வசதி இன்றி திறந்தவெளியில் செயல்பட்டு வந்தது. இப்பகுதியில் நிரந்தர கட்டிட வசதியுடன் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் சித்தரேவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.62.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை கடந்த பிப்ரவரி மாதம் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிலையில் விவசாயிகள் விளைந்த நெல்களை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இங்கு முதன்முறையாக நெல் கொள்முதல் செய்யும் பணியை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி மலைச்சாமி, அத்திக்குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராம்வேல், கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், முருகன், செலான், சந்திரசேகர், புரோஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திண்டுக்கல் நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு செல்லப்படுவதாகவும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு மாநில அரசின் ஊக்கத்தொகையுடன் சேர்த்து கிலோவிற்கு ரூ.23.10 வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

The post பட்டிவீரன்பட்டி சித்தரேவில் நெல் கொள்முதல் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti Siddare ,Pattiveeranpatti ,Chittarevu ,Dinakaran ,
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...