வடமதுரை, மார்ச் 17: வடமதுரை ரயில் நிலையத்தில் நின்று சென்ற திருநெல்வேலி- மயிலாடுதுறை, மதுரை- விழுப்புரம் ரயில்களை கொரோனாவை காரணம் காட்டி ரயில்வே நிர்வாகம் நிறுத்தியது. இதனால் வடமதுரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் ரயில் சேவையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்த ரயில்களை மீண்டும் இயக்க பலமுறை ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதனை பரிசீலித்த தெற்கு ரயில்வே நிர்வாகம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் வடமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட்டது. அதன்படி நேற்று முதல் திண்டுக்கல்- விழுப்புரம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5:12 மணிக்கும், மறு மார்க்கத்தில் இரவு 9:20 மணிக்கும், செங்கோட்டை- மயிலாடுதுறை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11:42 மணிக்கும், மறு மார்க்கத்தில் மதியம் 3:27 மணிக்கும், வடமதுரை ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் ஒரு நிமிடம் நின்று சென்றது. செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில், வடமதுரை ரயில் நிலையம் வந்த போது ரயில் நிலைய பாதுகாப்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ரயில் என்ஜின் பைலட்டுகள், ரயில் கார்டு, ஸ்டேஷன் மாஸ்டர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து, ரயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். அதன்பின் ரயில் புறப்பட்டு சென்றது.
விழுப்புரம் ரயில் மூலம் காலை நேரத்தில் விழுப்புரம் வரை நேரடியாகவும், திருச்சியில் வண்டி மாறி தஞ்சாவூர், நாகூர், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுரை வரை பல ஊர்களுக்கும் செல்லலாம்.அதேபோல் மதியம் வடமதுரை வழியாக செங்கோட்டை போகும் (ரயிலில் மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசிக்கு நேரடியாகவும், இதில் ஏறி திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ரயில் நிலையங்களில் இறங்கி அடுத்தாக கரூர் வழியாக வரும் ஈரோடு- செங்கோட்டை ரயிலில் சாத்தூர், மணியாச்சி, கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் போன்ற ஊர்களுக்கு செல்லலாம். இதற்கான டிக்கெட்டை வடமதுரை ரயில் நிலையத்திலேயே பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த ரயில்களை மக்கள் பயன்படுத்துவதை பொறுத்து எதிர்காலத்தில் இவை நிரந்தர நிறுத்தமாக்கப்படும் என்றும், சில தொலை தூர எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் வடமதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தம் பெற வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்
The post வடமதுரை ரயில் நிலையம் வந்த செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.