×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான 22ம் தேதி தேரோட்டமும், 23ம் தேதி அறுபத்துமூன்று நாயன்மார்கள் வீதியுலாவும் விமரிசையாக நடக்க உள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 27ம் தேதி வரை விழா விமரிசையாக நடக்கிறது. இன்று காலையில் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் இசைக்க கோயில் மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கொடி மீது மலர்தூவி வணங்கினர்.

தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு புஜை செய்யப்பட்டது. பக்தர்கள் பக்தி பரசவத்துடன் கோஷமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகபெருமான் ஆகியோருக்கு மல்லிகை பூ, கனகாபரம் பூ உள்ளிட்ட பல்வேறு பூக்களுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் சந்நிதியில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கொடியேற்றம் மற்றும் சிறப்பு பூஜை முடிந்ததும் பவழக்கால் விமானம் மூலம் கபாலீஸ்வரர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து 10 நாட்களுக்கு பகல், இரவு நேரங்களில் ஐந்திருமேனிகள் வீதி உலா, பக்தர்களுக்கு அன்னதானம், நாதஸ்வர வித்வான்களின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 22ம் தேதி காலை நடைபெறுகிறது.

23ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் அறுபத்துமூன்று நாயன்மார்களில் வீதியுலா நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 25ம் தேதி இரவு 7.45 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 10 நாட்களுக்கு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் நடைபெறும் அன்று கூட்ட நெரிசலை தடுக்கவும், அசம்பாவித சம்பவம் நிகழாமல் பாதுகாக்கவும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Mylapore Kapaleeswarar Temple Panguni festival ,CHENNAI ,Panguni festival ,Kapaleeswarar Temple ,Mylapore ,Chariot ,22nd ,63 Nayanmaral Vethiula ,Mylapore Kapaleeswarar temple ,
× RELATED மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா