×

எண்ணூரில் வாயு கசிவு ஏற்பட்ட உர தொழிற்சாலையை மூடக்கோரி மக்கள், வியாபாரிகள் மனித சங்கிலி

திருவொற்றியூர்: சென்னை எண்ணூர் பெரியகுப்பத்தில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி எண்ணூரை சுற்றியுள்ள 33 மீனவ கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும் ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வாயுகசிவு ஏற்பட்ட உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் சின்னகுப்பம் வரை உள்ள 33 மீனவ கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அப்போது உரத் தொழிற்சாலையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர். பிரச்னை ஏற்படாமல் இருக்க துணை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post எண்ணூரில் வாயு கசிவு ஏற்பட்ட உர தொழிற்சாலையை மூடக்கோரி மக்கள், வியாபாரிகள் மனித சங்கிலி appeared first on Dinakaran.

Tags : Ennoor ,Periyakuppam, Ennore, Chennai ,Dinakaran ,
× RELATED எண்ணூரில் மீன் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்