×

மகளிர் பிரீமியர் இறுதி போட்டிக்கு ஆர்சிபி தகுதி; எங்கள் வெற்றியை என்னால் நம்ப முடியவில்லை: கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டி

டெல்லி : மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி கடைசி நேரத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி 3 ஓவர்களில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என எளிதான நிலையில் இருந்தபோது, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை மும்பை அணி இழந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் வெற்றி குறித்து ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறியதாவது:-

இது ஒரு சிறந்த ஆட்டமாக அமைந்தது. என்னால் இன்னும் நாங்கள் வென்றுவிட்டோம் என்பதை நம்ப முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் பேட்டிங்கில் 20 ரன்கள் குறைவாக அடித்து இருந்தோம். ஆனால் எங்கள் அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்துவீசி களத்தில் நன்றாக பீல்டிங் செய்து வெற்றியை தேடி கொடுத்துள்ளனர். 135 ரன்கள் தான் எடுத்திருந்தோம். இந்த இலக்கு போதுமானதா? இல்லை ஆக்ரோஷமாக செயல்படணுமா? தற்காப்பு செய்யவேண்டுமா என்ற குழப்பத்தை கொடுக்க கூடிய இலக்காகும். கடைசி ஓவரை ஆஷா சிறப்பாக வீசினார். ஹர்மன்பிரீத் கவுர் விக்கெட் தான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டது. 19-வது ஓவரை சோபியும் அபாரமாக வீசினார்.

அதுதான் இந்த ஆட்டத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியது. பெர்ரீ குறித்து நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் ஒரு ஜாம்பவான். நாங்கள் பேட்டிங்கில் 3 விக்கெட்டுகளை இழந்த பின்னரும் அவர் அதிரடியாக ஆடி எங்கள் அணியை காப்பாற்றினார். கடைசி ஆட்டத்திற்கு பிறகு இந்த ஆட்டத்திற்கு நாங்கள் சிறப்பான முறையில் தயாரானோம். டாஸ் போடும்போது நான் நல்ல மனநிலையில் இருந்தேன். ஆனால் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தபோது ஏமாற்றம் அடைந்தேன். கிரிக்கெட் என்பது ஒரு ஜாலியான விளையாட்டு. நீங்கள் வெற்றி பெறுவீர்களா, தோல்வி அடைவீர்களா என்று உங்களால் நிர்ணயிக்கவே முடியாது. இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. அதில் பங்கேற்க சிறப்பாக பயிற்சி செய்து நல்ல மனநிலையில் வருவோம்.இவ்வாறு அவர் கூறினார். தற்போது மும்பை அணி தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை ஆர்சிபி அணியும் டெல்லி அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

கடைசியில் சொதப்பிவிட்டோம்: தோல்வி குறித்து மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் கூறுகையில், “எங்களது பந்துவீச்சில் எந்த குறையும் இல்லை. நாங்கள் சிறப்பாக செயல்பட்டு ஆர்சிபி அணியை 140 ரன்கள் சுருட்டினோம். எங்கள் பேட்டிங்கும் நன்றாக தான் இருந்தது. ஆனால் கடைசி 12 பந்துகளில் நாங்கள் சொதப்பிவிட்டோம். இறுதி கட்டத்தில் எங்களால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. இதுதான் டி20 கிரிக்கெட் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம். டி20 கிரிக்கெட் உங்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். அந்தக் கட்டத்தில் எப்படி விளையாடுவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

நான் ஆட்டமிழந்தவுடன் எங்கள் அணி வீராங்கனைகள் கொஞ்சம் பதற்றம் அடைந்துவிட்டனர் என நினைக்கின்றேன். அதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. சஞ்சனா அதிரடியாக விளையாடக்கூடிய வீராங்கனை. இதுபோன்ற வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் மகளிர் பிரீமியர் லீக்கின் முக்கிய குறிக்கோள். எங்கள் ரசிகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, இந்த சீசனில் நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம். இந்த சீசன் எங்களுக்கு பல உயர்வையும், சரிவையும் கொடுத்திருக்கிறது.கடைசி சீசனில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால் இம்முறை நாங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். அடுத்த சீசனில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்’’ என்றார்.

The post மகளிர் பிரீமியர் இறுதி போட்டிக்கு ஆர்சிபி தகுதி; எங்கள் வெற்றியை என்னால் நம்ப முடியவில்லை: கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டி appeared first on Dinakaran.

Tags : RCB ,Women's Premier final ,Captain Smriti Mandana ,Delhi ,women's IPL cricket ,Mumbai ,Dinakaran ,
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...