×

ஒன்றிய பாஜக அரசு மிகப்பெரிய ஊழலில் சிக்கியிருக்கிறது; மக்களை திசை திருப்ப பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசுகிறார்: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

சென்னை: ஒன்றிய பாஜக அரசு மிகப்பெரிய ஊழலில் சிக்கியிருக்கிறது. இதில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசுகிறார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அளித்த பேட்டி: ஒன்றிய பாஜக அரசு மிகப்பெரிய ஊழலில் சிக்கியிருக்கிறது. அதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கு இந்திய பிரதமர் பல்வேறு வகைகளில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

2019ல் இந்த தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டுவர முயற்சிக்கும் நேரத்தில் ராகுல்காந்தி சொன்னார். இது ஒரு கொள்ளையடிக்கும் முயற்சி என்று குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல அன்றைக்கு ஆர்பிஐ, தேர்தல் கமிஷன் போன்றவர்கள் இது வெளிப்படை தன்மையை இல்லாமல் ஆக்கிவிடும். இது தேர்தல் நடைமுறையை சீரழித்துவிடும். ஊழலை ஊக்குவிக்க வாய்ப்பு வந்துவிடும் என்று கூறினார்கள். அதை எல்லாம் மீறி இன்றைக்கு கோடிகோயாக பணத்தை மிரட்டி, ஒரு அரசே பணக்காரர்களை மிரட்டி அடிபணியவைத்து பணத்தை பறித்துள்ளார்கள். இது ஒருபக்கம்.

இன்னொரு பக்கம் கான்ட்ராக்டர்களுக்கு சலுகைகளை கொடுத்து பணத்தை பெற்று இருக்கிறார்கள். அதே போன்று நஷ்டத்தில் இயங்கி வந்த பல நிறுவனங்களிடம் இருந்து பலகோடி ரூபாய் வாங்கியுள்ளார். இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அப்படி நஷ்டத்தில் இயங்கின நிறுவனங்கள் எப்படி நூற்றுக்கணக்கான கோடி தர முடிந்தது. அப்ப நீங்கள் வந்து அவர்களை வருமானவரியில் இருந்து பாதுகாப்பதற்காக நஷ்டக்கணக்கு காட்டவைத்தீர்களா? உண்மையிலேயே அது நஷ்ட கணக்கில் ஓடிக்கொண்டிருந்தது என்று சொன்னால், அவர்களுக்கு வங்கியில் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்து, அதற்காக கையூட்டு பெற்று நீங்கள் அந்த பணத்தை பெற்றீர்களா? என்ற கேள்வி எல்லாம் வந்து கொண்டிருக்கிறது.

இதில் மிகப்பெரிய தருணத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம். கொஞ்சநாள் முன்னாடி தான் சிஏஜி அறிக்கை வந்து மிகத்தெளிவாக பல லட்சம் கோடி தவறு நடந்து இருக்கிறது என்று சொல்லியது. இந்த நேரத்தில், அதையும் மூடி மறைப்பதற்கு பல்வேறு சம்பந்தமில்லாத, சாதாரண மக்களுக்கு தேவையில்லாத பிரச்னைகளை எல்லாம் பேசிக்கொண்டு, மக்களிடம் உணர்ச்சி ஏற்படுத்தி திசைதிருப்புகிறீர்கள். இப்போது தான் அதையும் பண்ண போறீங்க. இப்போது கன்னியாகுமரியில் அவர் வந்து மீனவர்கள் பாதுகாப்பு என்று சொல்கிறார். நான் அவரை பார்த்து நேருக்கு நேராக ஒரு கேள்வியை வைக்கிறேன். சீனா வந்து வடஇந்தியாவில் 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்துள்ளது உங்கள் ஆட்சியில் என்று பல குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளது. அதை வாய்மூடி பார்த்து கொண்டிருந்தீர்களா?. உங்கள் அரசியல் சாதுர்யம் மூலமாகவோ, மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பு மூலமாகவோ கட்சத்தீவை மீட்டு எடுப்பதற்கு ஏதாவது முயற்சி செய்தீர்களா? எந்த முயற்சியும் செய்யவில்லை. இதில் மிகப்பெரிய பரிதாபம் என்னவென்றால், 2018ல் பாஜக ஆட்சி இருக்கும் பொது தான் முதல் முறையாக இலங்கை நம் மீனவர்களிடம் இருந்து கைப்பற்றிய படகுகளை விலைக்கு விற்று தேசியமயமாக்கினார்கள். அதை வாய்மூடி மவுனியாக மோடி அரசு பார்த்து கொண்டிருந்தது.

நாட்டில் கைப்பற்றப்பட்ட படகை வாங்கி கொடுக்க துப்பு இல்லாத ஒரு பிரதமர், மீனவர்களை பாதுகாப்போம் என்று சொல்லியிருக்கிறார். ஒக்கி புயல் வந்தது. கன்னியாகுமரியில் எவ்வளவோ மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் அழுக்குரலை கேட்டு அவர் வரவில்லை. அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வந்தார்கள். அதற்கு அப்புறம் காலம் கடந்து மோடி வந்தார். கன்னியாகுமரியில் பாதிப்பு இல்லை. மேற்கு கடற்கரையில் தான் பாதிப்பு என்று அந்த பகுதிக்கே செல்லாமல், கன்னியாகுமரி விருந்தினர் இல்லத்தில் ஹெலிபேடில் இறங்கி புகைப்படம் கண்காட்சியை மட்டும் பார்த்து விட்டு சென்று விட்டார். எல்லாரும் கோரிக்கை வைத்தோம். கடற்கரையில் மீனவர்கள் அடிக்கடி காணாமல் போகிறார்கள்.

ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுத்து, ஹெலிகாப்டர் மூலமாக தேடும் வாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள் என்றோம். 10 ஆண்டுகாலம் எதையும் செய்யவில்லை. இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் இலங்கையில் 28 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளார்கள். திரும்ப திரும்ப முதல்வர் அங்குள்ள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீட்டு தாருங்கள் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பாக சவுதி அரேபியாவில் மாட்டியிருந்தவர்களை திமுக அயலக அணியும், வெளிநாடுவாழ் தமிழர்களும் இணைந்து மீட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரதமர் எப்படி மீனவர்களை பாதுகாப்பார் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய பாஜக அரசு மிகப்பெரிய ஊழலில் சிக்கியிருக்கிறது; மக்களை திசை திருப்ப பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசுகிறார்: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,PM Modi ,Minister Mano Thangaraj ,Chennai ,Modi ,Tamil Nadu ,Dairy ,Minister ,Mano Thangaraj ,Anna ,EU BJP government ,
× RELATED மக்களவை தேர்தல் முடியும் வரை பிரதமர்...