- சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்
- மேற்கு கான்டினியம் மலை
- அய்கோர்ட்
- மதுரை
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- Icourt
- பாலயங்கோட்டை சித்தா மெடிகல் காலெஜ்
- எய்கார்ட்
- தின மலர்
மதுரை : சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலை கழகம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பழைய கட்டிடங்களை இடிக்கவும் கல்லூரியை இடம் மாற்றம் செய்யும் நடவடிக்கைக்கும் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சென்னைக்கு அருகில் தனி சித்த மருத்துவ பல்கலை அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலை சட்டம் 2022ல் கொண்டு வரப்பட்டது. அது கவர்னரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லுாரியில் உள்ள பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதுப்பிக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்,”என்று வாதிட்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “சித்த மருத்துவமுறை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தான் உருவானது. அங்கு பல சித்தர்கள் தங்கி சித்த சிகிச்சை முறைகளை செய்துள்ளனர். தமிழகத்தின் முதல் சித்த மருத்துவக் கல்லுாரி மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள குற்றாலத்தில் 1956 ல் துவக்கப்பட்டது.
அது 1964 ல் பாளையங்கோட்டைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. தற்காலிக இடத்திலேயே 60 ஆண்டுகளாக தொடர்கிறது. அவ்வளாகத்தில் போதிய இடவசதி இல்லை. இது சித்த மருத்துவக் கல்லுாரிக்கு போதுமானதாக இல்லை. மேலும் திட்டத்தின் தேவையைவிட, நிர்வாக வசதிக்காக பெரும்பாலும் திட்டங்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனை ஏற்க முடியாது. கவர்னரின் ஒப்புதலுக்காக நிலுவையிலுள்ள சித்த மருத்துவப் பல்கலை சட்டம் கொண்டுவந்த தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். சென்னைக்கு அருகே சித்த மருத்துவ பல்கலை. அமைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சித்த மருத்துவம் உருவான மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் பொருத்தமான இடத்தை கண்டறிய வேண்டும்,” இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
The post மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க பொருத்தமான இடத்தை கண்டறிய வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.