×

நீதிமன்ற கட்டிடத்திற்கு கூடுதல் வசதி ஏற்படுத்த ரூ.14.59 கோடி நிதி

*முதல்வருக்கு வக்கீல்கள் சங்கத்தினர் நன்றி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரின் மையப் பகுதி தாலுகா வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதி மன்றம், குற்றவியல் நடுவர் நீதி மன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ஜேஎம்1 மற்றும் ஜேஎம்2 உள்ளிட்ட நீதி மன்றங்கள் தனித்தனியே செயல்படுகிறது. நீதிமன்றங்களுக்கு வழக்கு சம்பந்தமாக வருவோர் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு என, போதிய இடவசதி இல்லாமல் இட பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கோவை ரோடு சிடிசி மேட்டில், நகராட்சிக்கு சொந்தமான 10.27 ஏக்கரில், ஆச்சிப்பட்டி சங்கம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட இடத்தில் சுமார் 3.9 ஏக்கர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமான பணி சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பூமி பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. ரூ.35.50 கோடியில், இப்பணி, பொதுப் பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வளாகத்தில், சுமார் 10 கோர்ட் அரங்கு, நீதிபதி அறை, வக்கீல் சங்க அறை, மீட்டிங் ஹால், கான்பிரன்ஸ் ஹால், கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதியுடன் 3 அடுக்கு மாடியுடன் கட்டுமான பணி நடைபெற்றது. மேலும், நீதிபதிகள் தங்கும் குடியிருப்புகளும் தயாரானது. சுமார் 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டுமான பணி, திடீர் என தோய்வுற்றதுடன், கூடுதல் நிதிக்கோரி பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கட்டுமான பணிகள் விரைந்து மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டது. கட்டிடம் முழுவதும் வர்ணம் பூசியிருந்தாலும், கட்டிட உள் அரங்குகளில் இன்னும் பல பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கட்டுமான பணிக்கு போதிய நிதி ஒதுக்கி மீண்டும் பணியை துவங்கி, விரைந்து நிறைவு செய்வதுடன் மக்கள் பயன்பாட்டிற்கு விட சம்பந்தத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக, தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி பொள்ளாச்சியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டிடத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்துக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக ரூ.14 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார்.

பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக புதிய கட்டிடத்துக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த நிதி ஒதுக்கி உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, வக்கீல்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இதில் நகர திமுக சார்பில், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதற்கு நகர கழக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட வக்கீல்கள் அணி அமைப்பாளர் மருதராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்க தலைவர் துரை மற்றும் வக்கீல்கள் பலரும் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி பகுதியில் பல ஆண்டு கோரிக்கையில் ஒன்றான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டமான பணி 2020ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பணி பெரும் பகுதி நிறைவடைந்த நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கீடுக்காக கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கூடுதல் நிதியை அரசிடம் விரைந்து பெற்று, ஒருங்கிணைந்த கட்டுமான பணியை மீண்டும் துவங்கி நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வக்கீல்கள் மட்டுமின்றி அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், கோரிக்கையை முதல்வர் ஏற்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்த ரூ.14.59 கோடி ஒதுக்கியுள்ளார். இதற்காக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும், இதற்கு முழு முயற்சி எடுத்த கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்’’ என்றனர்.

The post நீதிமன்ற கட்டிடத்திற்கு கூடுதல் வசதி ஏற்படுத்த ரூ.14.59 கோடி நிதி appeared first on Dinakaran.

Tags : Lawyers' Association ,Pollachi ,District Law Court ,Probate Court ,Criminal Arbitration Court ,Additional District Law Court ,JM1 ,JM2 ,Taluka ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!