×

பாபநாசம் தாலுகா பகுதிகளில் குறுவை நாற்றங்கால்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

*இரவுக்காவலில் விவசாயிகள்

கும்பகோணம் : கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா பகுதிகளில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபநாசம் வட்டம், அன்னப்பன்பேட்டை மெலட்டூர், கோனியகுறிச்சி, குண்டூர் உள்பட 10க்கும் அதிகமான கிராமங்களில் மின்மோட்டாரை பயன்படுத்தி குறுவை சம்பா தாளடி கோடை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் முன்பட்ட குறுவை சாகுபடி 20 ஏக்கரில் நடவு செய்வதற்காக அன்னப்பன்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோ 51 ரக விதை நெல்லை விவசாயிகள் நாற்றங்காலில் தெளித்து இருந்தனர். இந்த விதைநெல் தற்போது முளைப்பு பருவத்தில் உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து நாற்றங்காலை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விதை நெல் முளைப்பு திறனின்றி வீணாகும் நிலை உருவாகி உள்ளது. இதே போல அந்த பகுதியில் 10க்கும் அதிகமான கிராமங்களில் 500 ஏக்கரில் நடவு செய்வதற்காக விதை நெல் தெளிக்கப்பட்டிருந்த நாற்றங்காலை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன.

இது குறித்து அன்னப்பன்பேட்டையை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கூறியதாவது: அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் மின் மோட்டாரை பயன்படுத்தி குறுவை சாகுபடியை முன்கூட்டியே தொடங்கி விடுவோம். இதன்படி கோ 51 ரக விதை நெல்லை வாங்கி நாற்றங்காலில் தெளித்தோம். அவை லேசாக வளர்ந்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் வயலில் இறங்கி உருண்டு புரண்டு நாற்றங்காலை சேதப்படுத்தி வருகின்றன.

தனியாரிடமிருந்து 30 கிலோ கொண்ட கோ 51 ரக விதை நெல் சிப்பத்தை ரூ.1300க்கு வாங்கி நீர் பாய்ச்சுதல், ஆள் கூலி என ஏக்கருக்கு மொத்தம் ரூ.2,500 வரை செலவாகி உள்ளது. இதேபோல இந்த பகுதியில் 10க்கும் அதிகமான கிராமங்களில் 500 ஏக்கர் நடவு செய்ததற்காக தெளிக்கப்பட்டிருந்த நாற்றங்காலை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளன. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதே ரக விதை நெல் கிடைப்பது அரிது. எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். காட்டுப்பன்றிகள் நாற்றங்காலை சேதப்படுத்தாமல் இருக்க வயலை சுற்றிலும் வலை அமைத்தும், அங்கேயே விவசாயிகள் இரவு நேரங்களில் காவல் காத்தும் வருகின்றனர்.

The post பாபநாசம் தாலுகா பகுதிகளில் குறுவை நாற்றங்கால்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் appeared first on Dinakaran.

Tags : Kuruvai ,Papanasam taluk ,Kumbakonam ,Papanasam district ,Annapanpet ,Melatur ,Koniakurichi ,Guntur ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை