×

ஊசுட்டேரியில் பறவைகள், விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்காத வனத்துறை அதிகாரிகள்

*அழிந்து வரும் அரியவகை உயிரினங்கள்

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வில்லியனூர் : புதுவை ஊசுட்டேரியில் பறவைகள், விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்காத வனத்துறை அதிகாரிகளால் அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகையால் இவைகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வில்லியனூர் அருகே உள்ள ஊசுட்டேரி புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரிகளில் முதன்மையானதாக விளங்குகிறது. இது புதுச்சேரி-தமிழக பகுதிகளை சேர்த்து 800 ஹெக்டர் பரப்பளவை கொண்டது. புதுச்சேரி 390 ஹெக்டர் பரப்பளவும், தமிழகம் 410 ஹெக்டர் பரப்பளவும் கொண்டுள்ளது. 15.54 சதுர கி.மீ நீர்பிடிப்பு பகுதியை கொண்ட ஊசுட்டேரி 4 கனஅடி நீர் கொள்ளளவை கொண்டது. இந்த ஊசுட்டேரிக்கு சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் இருந்தும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் இருந்தும் பருவமழையின் போது தண்ணீர் வருவது வழக்கம். இதனால் ஊசுட்டேரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து பலவகையான பறவைகள் ஏராளமாக வந்து ஏரியை அலங்கரித்து வருகிறது. ஊசுட்டேரிக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான அரியவகை பறவைகள் வந்து செல்வதால் கடந்த 2008ம் ஆண்டு புதுச்சேரி அரசு ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. பிறகு தமிழக அரசும் பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. இந்நிலையில் புதுச்சேரி அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி விடப்பட்டது.

இதன் மூலம் ஏரியில் உள்ள பறவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வந்தனர். இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் வெளிநாடுகளில் இருந்து இரைக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் பலவிதமான பறவைகள் ஊசுட்டேரிக்கு வருவது வழக்கம். ஏரியில் பறவைகள் தங்குவதற்கும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்கும் போதிய இடம் இல்லாததால் கரையோரம் உள்ள சில புதர்களில் தஞ்சம் அடைந்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஊசுட்டேரி படகு குழாம் அருகே 5 குன்றுகள் அமைக்கப்பட்டது. பிறகு அடுத்தடுத்து பெய்த மழையால் குன்றுகள் தண்ணீரில் கரைந்து சிறிய குன்றாக மாறியுள்ளது. தற்போது பறவைகள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளன. இருப்பினும் அதிகளவில் அரியவகை பறவைகள் வருவதால் அவைகள் தங்குவதற்காக ஏரியில் குன்றுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தாண்டு பெய்த பருவமழையால் ஊசுட்டேரி நிரம்பி காணப்பட்டது. ஆகையால் ஏரியில் அதிகளவில் மீன்கள் உற்பத்தியாகியுள்ளன. இதற்காக வெளிநாடுகளில் இருந்து பறவைகள் ஏரிக்கு வந்து செல்கின்றன. இதனிடையே ஊசுட்டேரியை சுற்றியுள்ள சில மர்ம நபர்கள் ஏரிக்கு சென்று மீன்களையும், பறவைகளையும் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். ஏரியை சுற்றியுள்ள புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த காட்டுப்பகுதியில் ஏராளமான மயில்கள், அரியவகை விலங்கினங்கள், பறவைகள் வசித்து வருகின்றன. இதனை சில சமூக விரோதிகள் வேட்டையாடி புதுவை, தமிழக பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அரியவகை உயிரினங்கள் அழிந்து
வருகிறது.

இதனை கண்காணிக்க வேண்டிய வனம் மற்றும் வனவிலங்கு துறை கண்டும் காணாமல் இருந்து வருகிறது. ஊசுட்டேரியில் இதுபோன்ற குற்ற சம்பவங்களை கண்காணிக்க அரசு சார்பில் வனத்துறைக்கு 2 படகுகள் வழங்கப்பட்டது. இதனை வனத்துறை அதிகாரிகள் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டதால் அவை தற்போது இயங்காமல் பழுதடைந்துள்ளது.

வனத்துறை அதிகாரிகள் எப்போதாவது ஞாயிற்று கிழமைகளில் மட்டும் காலை நேரத்தில் சென்று வேட்டையாடப்பட்ட சில பறவைகளை பறிமுதல் செய்து கொண்டு வந்து தாங்களும் வேலை செய்வதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வேலையை பார்க்கின்றனர். புதுவையில் உள்ள வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சரிவர பணிகளில் ஈடுபடாததால் உயிரினங்கள் வேட்டையாடப்படுவது, மீன்பிடிப்பது போன்ற குற்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வப்போது பறிமுதல் செய்யப்படும் பறவைகள், விலங்கினங்கள் போன்றவற்றை சில உயரதிகாரிகளுக்கு விருந்து வைக்க பயன்படுத்துவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வனத்துறை என்பது உயிரினங்களையும், இயற்கையையும் பேணி பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் புதுவை வனத்துறை அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து ரோந்து சென்று பறவைகளையும், உயிரினங்களையும் வேட்டையாடுவதை தடுப்பதில்லை. மாறாக கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கு ஏற்றார்போல் வேட்டையாடிய பின் பொதுமக்கள் தகவல் கொடுத்தால் பிறகு சென்று அவற்றை பறிமுதல் செய்து வரும் பணியை மட்டும் செய்கின்றனர். எனவே வனத்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் ரோந்து சென்று பறவையினங்கள், மீன்கள், விலங்குகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊசுட்டேரியில் பறவைகள், விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்காத வனத்துறை அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Usuteri ,Willianur ,Puduvai Oosutteri ,
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை