×

கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க ஒட்டான் குளத்தில் படகுத்துறை அமைக்கும் திட்டம்

*நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்

கூடலூர் : கூடலூர் நகராட்சியின் வருவாயை பெருக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்தை உருவாக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் ஒட்டான்குளத்தை சீரமைத்து படகு விடும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டாம்நிலை நகராட்சி கூடலூர். இந்த நகராட்சியின் மையப் பகுதியில் ஒட்டான்குளம் என்றழைக்கப்படும் மைத்தலை மன்னாடிகுளம் கண்மாய் உள்ளது.

மழைக்காலங்களில் மட்டும் சுரங்கனார் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் தண்ணீரும், முல்லைப்பெரியாறிலிருந்து வைரவன் வாய்க்கால் மூலம் கூட்டாறு வழியாகவும் ஒட்டான்குளத்திற்கு தண்ணீரும், இந்தக் கண்மாயில் தேக்கிவைக்கப்படுவதால் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்து காணப்படும். இந்தக் கண்மாய் 9.110 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். இக்குளத்து நீர்மூலம் இப்பகுதியிலுள்ள சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் இருபோக நெல் சாகுபடிக்கு பாசனவசதி பெறுகின்றன.

இப்பகுதியை சேர்ந்த கால்நடைகளுக்கு குடிநீராகவும் இங்கு தேக்கிவைக்கப்படும் தண்ணீர் பயன்படுகிறது. தேனி மாவட்டத்தில் வைகை அணை, சுருளி அருவி, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி ஆகியவையே முக்கிய சுற்றுலா மையங்களாக உள்ளன. கூடலூர் வழியாக அதிகளவிலான சுற்றுலா பயணிகள் தேக்கடிக்கு சென்று திரும்புகின்றனர். தற்போது கேரளாவில் இருந்து தமிழகப்பகுதிக்கு நாள்தோறும் வரும் சுற்றுலாப்பயணிகள், கூடலூர் அருகே லோயர்கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தையும், இப்பகுதிகளிலுள்ள திராட்சை தோட்டங்களையும் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கொடைக்கானல் ஏரிப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கென கட்டண கால்மிதி படகு (பெடல்போட்) விடப்பட்டுள்ளது போல் ஒட்டான்குளம் தண்ணீரிலும் கட்டணத்துடன் கூடிய பெடல் போட் விடப்பட்டால் தேக்கடி, சுருளி அருவி, மற்றும் திராட்சைத்தோட்டங்களை பார்க்கவரும் சுற்றுலாபயணிகள் ஒட்டான்குளம் பகுதி படகு சவாரிக்கும் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருவாய் குறைவாக வருவாய் கிடைக்கும் கூடலூர் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இந்நகராட்சிக்கு மற்ற நகராட்சிகளுடன் ஒப்பிடுகையில் குறைவான வருவாயே கிடைக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தப்பகுதி பராமரிப்பின்றி, திறந்தவெளி கழிப்பிடமாகக் கிடந்தது. திமுக ஆட்சி அமைந்ததும் கடந்த 2022ல் கூடலூர் ஒட்டான்குளத்தின் கரைகள் துப்புரவு செய்யப்பட்டு, கூடலூர் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ.50 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது இச்சாலை விவசாய வேலைகளுக்காக வாகனங்கள் செல்லவும், மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் பயன்படுகிறது.

ஒட்டான்குளத்தில் படகு சவாரி அமைக்கப்பட்டால் எந்த ஒரு பொழுது போக்கு வசதியும் இல்லாத கூடலூர் பொதுமக்களுக்கும் இது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதுடன், ஒட்டான்குளம் கண்மாயின் கரைப்பகுதிகளில் கழிவுகள் கொட்டுவதும் நிறுத்தப்படும்.

பொதுமக்கள் கூறுகையில்,“கூடலூரில் பொதுமக்களுக்கென்று பொழுதுபோக்கு அம்சமாக இருந்த காந்திஜி பூங்கா தற்போது குடிநீர் மேல்நிலைத் தொட்டியாகவும், கூடலூர் தெற்கு காவல்நிலையமாகவும் உள்ளது. இதனால் எந்த பொழுது போக்கு அம்சவும் இல்லாத கூடலூரில், ஒட்டாங்குளத்தில் கட்டண படகுச்சவாரி ஆரம்பித்தால் மக்கள் மகிழச்சி அடைவதுடன் நகராட்சிக்கு வருவாயும் பெருகும்’’ என்றனர்.

பொதுப்பணித்துறை அனுமதிக்கு காத்திருப்பு

நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை கூறுகையில், “பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பொதுப்பணித் துறைக்கு பாத்தியப்பட்ட புல எண். 1701ல் 1871 ஹெக்டேர் பரப்பளவுள்ள மைத்தல் மன்னாடி குளத்தின் கரையில், நகராட்சி நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைக்கப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இக்குளத்தினை கூடலூர் நகராட்சிக்கு 90 வருடத்திற்கு குத்தகைக்கு வழங்குமாறு ஒப்புதல் வேண்டி தலைமைப் பொறியாளர், நீர்வள ஆதாரத்துறை தேனி அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.

அவ்வாறு கூடலூர் நகராட்சிக்கு குத்தகை அடிப்படையில் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அரசு மற்றும் சுற்றுலா துறை மூலம் நிதியினை பெற்று குளத்தினை சீரமைத்து, படகுதுறை அமைக்க வழிவகை செய்யப்படும். இதனால் நகராட்சியின் வருவாய் அதிகரிக்கவும் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் இயலும் என கடந்த அக்டோபரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான அடுத்த கட்டபணிகளை செய்து வருகிறோம்’’ என்றார்.

The post கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க ஒட்டான் குளத்தில் படகுத்துறை அமைக்கும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Ottan Pond ,Kudalur Municipality ,Kudalur ,Ottankulam ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...