×

குன்னூரில் 4வது நாளாக எரியும் காட்டு தீயை அணைக்கும் பணி தீவிரம்

ஊட்டி : குன்னூர் அருகே 4வது நாளாக பற்றி எரியும் காட்டு தீயை அணைக்கும் பணியில் நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை ஆகிய வன கோட்டங்களை சேர்ந்த 150 வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக வனப்பகுதிகளில் செடி கொடிகள் காய்ந்தும், மரங்களில் இலைகள் உதிர்ந்தும் காணப்படுகிறது. இதனால், வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி வன கோட்டம், குன்னூர் வனச்சரகத்திற்குட்பட்ட பிளாக்பிரிட்ஜ் அருகேயுள்ள பாரஸ்டேல் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு 4வது நாளாக நேற்றும் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால், பல ஏக்கர் பரப்பளவில் மரங்கள் மற்றும் செடி, கொடிகள் தீயில் கருகியுள்ளது. அவற்றை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் செடி கொடிகள் காய்ந்துள்ளதாலும், தொடர்ச்சியாக காற்று வீசுவதாலும் தீயை அணைப்பதில் சிரமம் நீடிக்கிறது.

இதனிடையே, எவ்வாறு காட்டு தீ ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வனத்தை ஒட்டி அமைந்துள்ள தேயிலை தோட்டத்தை சுத்தம் செய்து காய்ந்த குப்பைகளை தீ வைத்து எரித்துள்ளனர். எதிர்பாராமல் தீ வனத்தில் பரவி காட்டு தீயாக மாறியது தெரியவந்தது. இது தொடர்பாக, பாரஸ்டேல் பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

மாவட்ட வன அலுவலர் கௌதம் மேற்பார்வையில் நீலகிரி, பொள்ளாச்சி, கோவை, உடுமலைபேட்டை ஆகிய வன கோட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் விதமாக இந்திய விமானப்படையை அணுகியுள்ளனர்.

நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம் கூறுகையில்,“காட்டு தீ ஏற்பட்ட வனப்பகுதியில் சைப்ரஸ் எனப்படும் அந்நிய மரங்கள் அதிகமாக உள்ளன. இந்த காட்டு தீயால் எவ்வளவு பரப்பளவு வனம் சேதமடைந்துள்ளது என மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், சுமார் 20 முதல் 30 ஹெக்டர் பரப்பளவு வனம் எரிந்து நாசமாகி இருக்கலாம்.
ஏற்கனவே, காற்றில் விழுந்து காய்ந்த மரங்களால் தீ வேகமாக பரவுகிறது.

மேலும் அடர்ந்த வனம் என்பதால் அங்கு செல்வதற்கு போதிய வசதி இல்லை. இதனாலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது’’ என்றார். இதனிடையே தீயணைப்பு துறையினரும் வனத்துறையினருடன் இணைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post குன்னூரில் 4வது நாளாக எரியும் காட்டு தீயை அணைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Nilgiri ,Coimbatore ,Pollachi ,Udumalaipet ,Nilgiris ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்