×

அந்தியூர் அருகே பஞ்சாயத்து தலைவர் கொலை 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

*பவானி நீதிமன்றம் தீர்ப்பு

பவானி : ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த சங்கராபாளையம் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தவர் சின்னத்தங்கம் (எ) ராதாகிருஷ்ணன் (48). இவர் கடந்த 2020ம் வருடம் பிப்ரவரி 3ம் தேதி, மூலக்கடை அருகேயுள்ள பைக் ரிப்பேர் கடைக்கு சென்றார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல், ராதாகிருஷ்ணனை, கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இது குறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரிந்தது. கடந்த 2013ம் வருடம் மூலக்கடையை சேர்ந்த சேகர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சங்கராபாளையம் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணையில் அனைவரும் கடந்த 2018ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். இதனால் வேதனை அடைந்த சேகரின் மகன் அரவிந்த், தனது தந்தையின் கொலைக்குப் பழி வாங்கும் வகையில் ராதாகிருஷ்ணனை கொலை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக அந்தியூர் சங்கராபாளையம், மூலக்கடையை சேர்ந்த சேகர் மகன் அரவிந்த் (25), கூலிப்படையைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த மூர்த்தி மகன் பாலா (எ) பாலமுருகன் (30), மதுரை, காட்டுநாயக்கன் முதல் வீதி, மாதப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் சூர்யா (எ) காட்னா சூர்யா (எ) முத்துமாரி (25), மதுரை கரிமேடு, அழகர் ஆதி 2வது வீதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் சிவா (எ) மிட்டாய் சிவா (24), மதுரை பிபி குளம், நேதாஜி மெயின் ரோட்டைச் சேர்ந்த பாண்டிகுமார் மகன் சரவணன் (எ) காளி (25), கார் டிரைவரான சென்னை, அண்ணா நகர் கிழக்கு 6-வது வீதி, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் ராஜேஷ் (எ) சதீஷ்குமார் (27) மற்றும் ஆயுதங்கள் கொடுத்ததாக அந்தியூர் எண்ணமங்கலம், செல்லம்பாளையத்தை சேர்ந்த கருப்பு செட்டியார் மகன் அபிமன்னன் (64), இக்கொலைக்கு உதவியாக இருந்ததாக அந்தியூர் சங்கராபாளையம் மூலக்கடையை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபாகரன் (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு விசாரணை பவானியில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை நீதிபதி தயாநிதி விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட கூலிப்படையை சேர்ந்த பாலா (எ) பாலமுருகன், காட்னா சூர்யா (எ) முத்துமாரி, சிவா (எ) மிட்டாய் சிவா, சரவணன் (எ) காளி (25) ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தவிட்டார். மேலும், அரவிந்த், ராஜேஷ் (எ) சதீஷ்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அபிமன்னன், பிரபாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பரணிதரன் ஆஜரானார்.

The post அந்தியூர் அருகே பஞ்சாயத்து தலைவர் கொலை 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Andhiyur ,Bhavani Court ,Bhavani ,Chinnathangam (A) Radhakrishnan ,Shankarapalayam ,panchayat ,Andyur ,Erode district ,Moolakadai ,
× RELATED ரத்னம் விமர்சனம்