×

மக்களவைத் தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: மக்களவை தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இன்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருடன், புதிதாக பதவி ஏற்ற 2 கமிஷனர்களும் இணைந்து தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளனர்.

நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், இந்திய தேர்தல் ஆணையம் 18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதல் தொடங்கிவிட்டது. அனைத்து முன்னேற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது. இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு, 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று அந்த சமூகவலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாசல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. மேலும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். அந்த வகையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post மக்களவைத் தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Delhi ,Lok Sabha ,Chief Election Commissioner ,Rajiv Kumar ,Dinakaran ,
× RELATED 2 கட்ட வாக்கு சதவீதத்தை உடனடியாக...