×

சிறுதானிய புட்டுகள், காய்கறி தோசைகள் உணவு திருவிழாவில் அசத்திய பள்ளி மாணவர்கள்

 

விருதுநகர், மார்ச் 16: விருதுநகர் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெற்றிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விருதுநகர் பாவாலி சாலையில் உள்ள நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் நேற்று உணவுத் திருவிழா நடைபெற்றது.

இதில், நவதானிய பொங்கல், வரகு, கம்பு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானிய உணவுப்பொருளினால் செய்யப்பட்ட, தோசை, புட்டு வகைகள், இனிப்பு மட்டும் கார பனியாரங்கள், பயறு வகைகள், கேழ்வரகு கஞ்சி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி தோசைகள், கீரை சூப்புகள், மிட்டாய் வகைகள், கொழுக்கட்டை வகைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன.

பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பெற்றோரின் உதவியுடன் செய்திருந்த இந்த உணவு வகைகள் மற்ற மாணவர்களையும் பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்தது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை ராஜம் மற்றும் ஆசிரியை அருள் மேரி ஜோஸ்பின், சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை ராஜம் கூறுகையில், ‘‘கடந்த தலைமுறை மறந்து போன இக்கால தலைமுறையினர் அறியாத நோய் எதிர்ப்பு சக்தியும் உடலுக்கு வலுத் தரக்கூடியதுமான சிறுதானியம் மற்றும் நம் பாரம்பரிய உணவு வகைகளை மாணவ, மாணவியர் அறிந்து கொள்வதற்காக உணவுத் திருவிழாவினை பள்ளியில் நடத்தி வருகிறோம். ஒரே நேரத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களையும் கொண்டு நடத்தினால் மீதமான உணவு வகைகள் வீணாகி விடுகிறது.

இதனால் வகுப்பு வாரியாக உணவுத் திருவிழாவை நடத்தி வருகிறோம். வீடுகளில் தற்பொழுது, தயாரித்த தரப்படும் தோசை, இட்லி, இடியாப்பம் போன்ற அரிசி உணவு வகைகள் மற்றும் சப்பாத்தி உள்ளிட்ட கோதுமை உணவு வகைகளை மட்டுமே சாப்பிட்டு வரும் மாணவ, மாணவியர் சிறு தானியங்களினால் செய்யப்பட்ட இந்த உணவு வகைகளை பார்த்தும் ருசித்தும் மகிழ்ந்தனர். மேலும் இதனை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டனர். நன்மையை நோக்கி நம்மை நகர்த்தும் இது போன்ற உணவு திருவிழாக்கள் மாணவ சமுதாயத்திற்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்றாகும்’’ என்றார்.

The post சிறுதானிய புட்டுகள், காய்கறி தோசைகள் உணவு திருவிழாவில் அசத்திய பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar Municipal Muslim ,Middle ,School ,Municipal Muslim Middle School ,Virudhunagar Bawali Road ,
× RELATED நிலக்கடலையில் வேர் அழுகல் நோய்...