×

ஊட்டி காலநிலையில் திடீர் மாற்றம்

 

ஊட்டி, மார்ச் 16: நீலகிரியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஊட்டியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.  நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இம்முறை வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. மழை குறைந்தவுடன் உறைப்பனி பொழிவு அதிகரித்தது.

கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஊட்டியில் உறைப்பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பனி பொழிவு காணப்பட்டது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பல நாட்கள் 5 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை சென்றது. உறைப் பனி தாக்கம் மூன்று மாதமும் நீடித்த நிலையில், ஒரு சில பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருகின.

அதே போல், சில பகுதிகளில் புல்வெளிகள், வனங்கள் ஆகியன பாதிக்கப்பட்டன. அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டியெடுத்தது. இதனால், தேயிலை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். அதேபோல், சுற்றுலா பயணிகளும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரை தாக்குபிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் பனியின் தாக்கம் குறைந்துள்ளது.

நேற்று ஊட்டியில் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மேகம் சூழ்ந்து காணப்பட்டது. பனி குறைந்த நிலையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் குளிர் குறைந்தே இருந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து நேற்று ரம்மியமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். மழை பெய்தால், பனியில் கருகியுள்ள வனங்கள் மற்றும் புல்வெளிகளில் பசுமை திரும்ப வாய்ப்புள்ளது. அதேசமயம், குடிநீர் பிரச்னையும் குறையும் எனவே, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மழை பெய்ய வேண்டி வர்ண பகவானை வேண்டி வருகின்றனர்.

The post ஊட்டி காலநிலையில் திடீர் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...