×

கொடுமுடி காவல் ஆய்வாளரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

 

கொடுமுடி, மார்ச் 16: ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திலகவதி. இவரது கணவர் சுப்ரமணி. இருவரும் திமுக நிர்வாகிகள். இந்த நிலையில், கடந்த 12ம் தேதி பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று சுப்ரமணி செயல் அலுவலரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஏமகண்டணூரை சேர்ந்த பாஜ நிர்வாகி பாலசுப்ரமணி என்பவர் வந்துள்ளார். செயல் அலுவலரிடம் பேசிக்கொண்டிருந்ததால் பாலசுப்ரமணியை சற்று வெளியில் காத்திருக்குமாறு சுப்ரமணி கூறியுள்ளார்.

வெளியே சென்ற பாலசுப்ரமணி சற்று நேரத்தில் திரும்பி வந்து, என்னை வெளியே போகச்சொல்ல நீ யார் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று தான் எடுத்து வந்த கத்தியால் சுப்ரமணியை குத்தியுள்ளார். இதில், இருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பை தொடர்ந்து சுப்ரமணி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பாலசுப்ரமணி ஈரோடு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் பேரூராட்சி அலுவலகத்துக்கு கொடுமுடி இன்ஸ்பெக்டர் ஆனந்த் விசாரணைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜாகமால்ஹசன் உள்ளிட்ட சிலரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து பேரூராட்சி கவுன்சிலர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தலைவர் திலகவதி, துணைத்தலைவர் ராஜாகமால்ஹசன் ஆகியோர் கூறியதாவது:

சுப்ரமணி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பாலசுப்ரமணியை கைது செய்ய வேண்டும். மேலும், பாலசுப்ரமணி கொடுத்த பொய் புகாரை ரத்து செய்ய வேண்டும். இன்ஸ்பெக்டர் ஆனந்த் விசாரணை ஒருதலைப்பட்சமாக உள்ளதால் அவர் விசாரணை மேற்கொள்ளக்கூடாது. அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து, கொடுமுடி தாசில்தார் பாலகுமார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

The post கொடுமுடி காவல் ஆய்வாளரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kodumudi ,Tilakavathy ,President ,Kodumudi Municipal Council of Erode District ,Subramani ,DMK ,Dinakaran ,
× RELATED மாணவ ஊரக வேளாண் பணி