×
Saravana Stores

குட்கா விற்ற கடைக்கு சீல்

 

கடத்தூர், மார்ச் 16: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, தென்கரைக்கோட்டை ராமியனள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் கோபிநாதம்பட்டி எஸ்எஸ்ஐ கோவிந்தராஜன் உள்ளிட்ட குழுவினர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து கடைகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை இயங்க தடை விதித்த அதிகாரிகள், கடையினை பூட்டி சீல்வைத்து வெளியே நோட்டீஸ் ஒட்டிச்சென்றனர்.

தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் தென்கரைக்கோட்டை, இராமியனள்ளி, கர்த்தானூர் பகுதியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், துரித உணவகங்கள், சில்லி சிக்கன், இறைச்சி மற்றும் மீன் வருவல் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது பேக்கரியில் கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்து அழித்தனர். அதே போல், அருகில் உள்ள பாஸ்ட்புட் கடையில் காலாவதியான குளிர்பானங்கள், செயற்கை நிறமூட்டிகள் சேர்த்த சில்லி சிக்கன் இறைச்சி, செயற்கை நிறமூட்டி பவுடர் பாக்கெட்டுகள், உரிய விவரங்கள் அச்சிடப்படாத கார்ன் பாக்கெட், பெப்பர் பவுடர் உள்ளிட்டவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து 2 கடைகளின் உரிமையாளர்களுக்கு முறையே ரூ.2000 மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

The post குட்கா விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Khatthur ,Morapur Union ,Food Safety Officer ,Nandagopal ,Gopinathampatti ,SSI Govindarajan ,Papripatti Taluka ,South Karaikot Ramiyanalli ,Tamil government ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரத்தில் குட்கா விற்ற கடைகளுக்கு சீல்