×

நீதிமன்ற ஊழியர் வீட்டை உடைத்து 6 பவுன் நகை, பணம் கொள்ளை

திட்டக்குடி, மார்ச் 16: நீதிமன்ற பெண் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வண்டிக்காரத் தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி மனைவி சரண்யா(31). திட்டக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற ஊழியர். நேற்று முன்தினம் சரண்யா மற்றும் அவரது கணவர் சத்தியமூர்த்தி வெளியூர் சென்று விட்டு, பின்னர் நேற்று காலை இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த துணிகள், பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

மேலும் அதிலிருந்த 6 பவுன், ரூ.35 ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து, பீரோவை உடைத்து அதிலிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. மூன்றரை லட்சம் ஆகும். அதிகாலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது.இது குறித்து புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்ததோடு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராகாட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நீதிமன்ற ஊழியர் வீட்டை உடைத்து 6 பவுன் நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Phetakkudi ,Cuddalore District ,Vandikarat Street ,Phetakkudy Municipality ,Dinakaran ,
× RELATED திட்டக்குடி அருகே டயர் வெடித்து மரத்தில் கார் மோதி பொறியாளர் பலி