×

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 10 பயணிகள் படுகாயம்

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புறவழிச்சாலையில் அரசு பேருந்து, டெய்லர் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் படுகாயமடைந்தனர். கிளாம்பாக்கத்தில் இருந்து அரசு விரைவு பேருந்து நேற்று அதிகாலை பயணிகளுடன் கும்பகோணம் நோக்கி புறப்பட்டு சென்றது.

செங்கல்பட்டு அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பச்சையம்மன் கோயில் அருகே சென்றபோது, சென்னை கும்மிடிப்பூண்டியில் இருந்து காற்றாலை மின் விசிறிகளுக்கான உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு சென்ற டெய்லர் லாரியின் பின்னால் திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் இருந்த 10 பயணிகள் படுகாயமடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த பயணிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தில் சிக்கி சாலையின் நடுவே நின்றிருந்த அரசுப் பேருந்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக, அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் டெய்லர் லாரி ஓட்டுனர் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 10 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Taylor ,Klambach ,Kumbakonam ,Chennai ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!