×

ரூ.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட யானைகவுனி ரயில்வே மேம்பாலம் திறப்பு: அமைச்சர், எம்பி, மேயர் பங்கேற்பு

திருவொற்றியூர்: சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் இருந்து புரசைவாக்கம், சூளை பகுதிகளுக்கு செல்லும் யானைகவுனி ரயில்வே மேம்பாலம் ரூ.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி, மேயர் பிரியா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தனர். சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் இருந்து புரசைவாக்கம், சூளை பகுதிகளுக்கு செல்ல, யானைகவுனி ரயில்வே மேம்பாலம் வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் பாலம் பழுதடைந்த காரணத்தால் இடித்துவிட்டு புதிதாக கட்ட மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் இடிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. மாநகராட்சி ரூ.30 கோடி, ரயில்வே துறை ரூ.40 கோடி என மொத்தம் ரூ.70 கோடி செலவில் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமானது. மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பலமுறை இதுகுறித்து ரயில்வே துறையிடம் பேசி விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு யானைகவுனி ரயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

தற்போது பாலம் திறக்கப்பட்டவுடன் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மேலும் இன்னொரு பகுதியில் பணிகள் நடந்து வருவதால், அந்த பணிகள் முடிந்ததும் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, தயாநிதி மாறன் எம்பி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த பாலத்தை சீர் செய்து திறக்க வேண்டுமென்று அப்போது எதிர்கட்சியாக இருந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம்.

2016ம் ஆண்டில் இந்த பாலம் மூடப்பட்டது, பின்னர் இந்த பாலம் புதிதாக கட்டப்படும் என உறுதி தந்தனர். ஆனால் 2019ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 20 முறை ரயில்வே மேலாளரையும், ரயில்வே அமைச்சரையும் சந்தித்து இந்த பாலத்தை கட்ட வலியுறுத்தினேன். தொடர்ந்து ஒன்றிய அரசு மாநிலத்தை வஞ்சிக்கிறது. ஒரு பாலம் கட்ட 8 ஆண்டு, எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 5 ஆண்டு என தொடர்ந்து ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது.

ரயில்வே துறை மேலும் காலம் தாழ்த்தாமல் மேம்பாலத்தின் மற்றொரு வழி தடத்தின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவேண்டும். சென்னை வெள்ளத்தின் போது வராத மோடி, தூத்துகுடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வராத மோடி இப்பொழுது வருகிறார் என்றால் அவர் தேவை, ஓட்டுக்காக மட்டுமே வருகிறார்.

தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத பிரதமர் மோடி ரூ.60 ஆக இருந்த பெட்ரோலை ரூ.100 ஆக விலையேற்றி, இப்போது வெறும் ரூ.2 குறைத்தால் என்ன லாபம் மக்களுக்கு வர போகிறது. ரூ.400 ஆக சிலிண்டர் விலை ரூ.1000 ஆக விலை ஏற்றியது மோடி, இப்போது ரூ.100 குறைத்தால் என்ன லாபம். மீண்டும் பழைய விலையை கொண்டு வர சொல்லுங்கள். தேர்தலுக்காக பிரதமர் மோடி எந்த வேஷமானாலும் போடுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* ரூ.5.5 கோடியில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.4181 கோடி மதிப்பீட்டில் 219 திட்ட பணிகளுக்கு நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். அதன் அடிப்படையில் காசிமேடு முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரை உள்ள கடற்கரை பகுதியை அழகுபடுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்து, பல்வேறு பிரிவுகளாக பணிகளை ஒதுக்கியுள்ளது.

சுங்கச்சாவடியில் இருந்து 800 மீட்டர் தூரத்திற்கு, எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் 3 மீட்டரில் நடைபாதையும், 0.5 மீட்டரில் சாலையோர பூங்காவும் ரூ.5.5 கோடி செலவில் நடைபெற உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், மேயர் பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி நகரமைப்பு குழுத் தலைவர் இளைய அருணா, மண்டலக் குழுத் தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் தேவி, குமாரி, பகுதி செயலாளர் லட்சுமணன், வழக்கறிஞர் மருது கணேஷ் உள்ளிட்ட திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் திருவொற்றியூர் பகுதியில் 1.9 கி.மீ தூரத்தில் ரூ.34 கோடி செலவில் கடற்கரை அழகுபடுத்தும் பணியை எம்எல்ஏ கே.பி.சங்கர் தொடங்கி வைத்தார்.

The post ரூ.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட யானைகவுனி ரயில்வே மேம்பாலம் திறப்பு: அமைச்சர், எம்பி, மேயர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Inauguration ,Yanagauni Railway Flyover ,Minister ,Mayor ,Tiruvottiyur ,Yiangauni ,Central Valtax Road ,Purasaivakkam ,Chulai ,PK Shekharbabu ,Dayanidhi Maran ,Priya ,Chennai… ,
× RELATED மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ பிரிவு தொடக்க விழா