×

ஆவடி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 2ம் நிலை அரசு மருத்துவமனை: காணொளி காட்சி மூலம் அமைச்சர் திறந்து வைத்தார்

ஆவடி, மார்ச். 16: ஆவடி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், திருவள்ளூர் மாவட்ட இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை கட்ட அரசு முடிவெடுத்தது. இந்த புதிய மருத்துவமனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் காணொளி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதற்கு முன்னதாக, கடந்த 2020ல், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் புதிய மருத்துவமனை கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன், ரூ.26.90 கோடி மதிப்பில் ஆரம்பித்த நிலையில், பல அத்தியாவசிய சோதனைகளை மேற்கொள்ள இரண்டாம் நிலை மருத்துவமனை கட்ட மறு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.45 கோடி மதிப்பில், கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் பணிகள் துவக்கப்பட்டது. இந்த புதிய மருத்துவமனை, 1.79 ஏக்கர் பரப்பளவில், தரைத்தளம் உட்பட மூன்று தளங்களுடன், 54,235 சதுர அடியில் பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டு கடந்த மாதம் பணிகள் முடிந்தது.

மேலும், பழைய மருத்துவமனை கட்டடத்தில், தரை தளத்தில் ஆண்கள் புற நோயாளிகள் பிரிவு, பெண்களுக்கு நோய் தொற்றாத சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, ஊசிகள் மற்றும் ‘சி.டி.சி’ ஸ்கேன். முதல் தளத்தில்: பல் மருத்துவம் மற்றும் பிரசவ பிரிவு. 2ம் தளத்தில் கூடுதலாக 5 படுக்கைகளுடன் 12 ‘டயாலிசிஸ்’ பிரிவாக மாற்றப்படவுள்ளது. தற்போது புதிய மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்:

* தரைத்தளம்: அவசர அறுவை சிகிச்சை மற்றும் பொது பிரிவு, அவசர அறுவை சிகிச்சை அரங்கம், நோய் நுண்மங்கள் இல்லாத பகுதி, படுக்கைகள் – 12, ஊடுகதிர் (எக்ஸ்ரே), மருந்தகம், வைப்பறை, தீ காய பிரிவு, வயிறு சுத்தம் செய்யுமிடம், வரவேற்பு, மருத்துவ அறை, செவிலியர் அறை, இருட்டறை,

* முதல் தளம்: பெண்கள் பிரிவு: அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு மற்றும் பொது பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய அறை 6 படுக்கைகள், பொது அறை – 24 படுக்கைகள், தனி அறை 1, செவிலியர் அறை, துணிகள் வைப்பிடம், பரிசோதனை அறை, ஆய்வகம், பொது அங்காடி, யூ.பி.எஸ்., பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு, மருத்துவர் மற்றும் செவிலியர் அறை.

* இரண்டாம் தளம் – ஆண்கள் பிரிவு: அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு மற்றும் பொது பிரிவு, பொதுமக்கள் காத்திருப்பு பகுதி, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய அறை 6 படுக்கைகள், பொது அறை 24 படுக்கைகள், தனி அறை 1, செவிலியர் அறை, துணிகள் வைப்பிடம், பரிசோதனை அறை, ரத்த வங்கி.

* மூன்றாம் தளம்: அறுவை சிகிச்சை அரங்கம் 2, மீட்பு அறை, அலுவலக அறை.
இவை மட்டுமின்றி, ரூ.5.85 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், ஒரே நேரத்தில் 26 நபர்கள் செல்லக்கூடிய இரண்டு மின் தூக்கிகள், அனைத்து தளத்திலும் கழிப்பறை வசதி, தீயணைப்பு உபகரணங்கள், 250 கி.வா., திறன் கொண்ட இரண்டு ‘ஜெனெரேட்டர்’, பார்க்கிங் வசதி உள்ளிட்டவை அடங்கும். அதுமட்டுமின்றி, பிரேத பரிசோதனை கூடம் முழு நேரம் செயல்படும்.

ஏற்கனவே செயல்படும் மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள், என 35 பேர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், புதிய மருத்துவமனையில் பணியாற்ற செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என மேலும் 41 பேர். பணியமர்த்தப்பட உள்ளனர்.
புதிய மருத்துவமனையில் கட்டட வடிவமைப்பு, தனியார் மருத்துவமனைக்கு இணையாக வசதிகள் அமைய உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர், இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அதிகாரி மீரா, ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், ஜி.உதயகுமார், மாநகரப் பொறுப்பாளர் சண்பிரகாஷ் , பகுதிச் செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள் மாவட்ட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆவடி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 2ம் நிலை அரசு மருத்துவமனை: காணொளி காட்சி மூலம் அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : 2nd Stage Government Hospital ,Avadi Government General Hospital ,Avadi ,Tiruvallur District Secondary Care Hospital ,Aavadi Government General Hospital ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Minister of Medicine ,Public Welfare ,level government hospital ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...