×

மாம்பாக்கம் கிராமத்தில் ரூ.28 லட்சத்தில் பள்ளி கட்டிடம் திறப்பு: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: மாம்பாக்கம் கிராமத்தில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடத்தினை திறந்து வைத்து, தமிழகத்தில் பள்ளி கல்வித்துறைக்கு தான் அதிகமான நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார் என்று டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தெரிவித்தார். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் பிரதீபன் அசோக் தலைமை தாங்கினார். பூண்டி ஒன்றிய செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், ஜான் பொன்னுசாமி, வட்டார கல்வி அலுவலர் பொற்கொடி, தலைமையாசிரியர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் காண்டீபன், கிளைச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் வரவேற்றனர். இதில், சிறப்பு அழைப்பாளராக கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு, ரூ.28 லட்சம் செலவில் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

பின்னர், பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசுகையில்; திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள பழைய ஓடுபோட்ட பள்ளி கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்களை கட்டினர். கும்மிடிபூண்டி தொகுதியில் மட்டும் 88 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் பள்ளி கல்விதுறைக்கு மட்டும் தான் அதிக நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார்.

மேலும் பேருந்து நிறுத்தம், தடுப்பனை போன்ற பல்வேறு மனுக்கள் கொடுத்தனர். அதை விரைவில் நிறைவேற்றப்படும் என்றார். முன்னதாக எம்எல்ஏவிடம், மாம்பாக்கம் கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்திற்கு ஆரணியாற்றின் குறுக்கே தடுப்பனை கட்ட வேண்டும், மாம்பாக்கம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும், மாளந்தூர் வரை வரும் தடம் எண் 580 என்ற மாநகர பேருந்தை மாம்பாக்கம் வரை நீடிக்க வேண்டும் என கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசிலமைப்பு குழு தலைவர் நீலவானத்து நிலவன், மாவட்ட கவுன்சிலர் சுதாகர், மாவட்ட பிரதிநிதி சிவய்யா, மகளிரணி விஜயமாலா, நளாயினி, ஊராட்சி தலைவர்கள் சித்ராபாபு, பாஸ்கர், சரசு பூபாலன், சீனிவாசலு, அண்ணாமலை, பாண்டியன், கண்ணன், சேகர், உதயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மாம்பாக்கம் கிராமத்தில் ரூ.28 லட்சத்தில் பள்ளி கட்டிடம் திறப்பு: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Mambakkam village ,DJ Govindarajan ,MLA ,Oothukottai ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu ,Bundi ,
× RELATED எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன்,...