×

1,500க்கு மேல் வாக்காளர்கள் கொண்டவை பிரிக்கப்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 22 வாக்குச்சாவடிகள் அமைப்பு: மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல் மற்றும் தேர்தல் செலவினங்கள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும் போது, 2024 நாடாளுமன்றத் தேர்தல் இன்று 16ம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரித்து துணைவாக்குச்சாவடிகள் அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்பேரில், இந்த மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதற்கு முன்பு 10 சட்ட மன்ற தொகுதிகளிலும் 3,665 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தற்போதைய நிலையில் தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து துணை வாக்குச் சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பூந்தமல்லி 5, ஆவடி 9, மாதவரம் 8 என புதிதாக 22 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு 3,687 வாக்குச்சாவடி மையங்களாக அதிகரித்துள்ளது. இனைத் தொடர்ந்து அரசியல் கட்சி கூட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருள்களின் மதிப்பீடு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கப்பட்ட பட்டியல் அடிப்படையில் இருத்தல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்ட்-ஐ தொடங்கி வைத்து அவர் படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சத்தியபிரசாத், உதவி ஆணையர் கலால் ரங்கராஜன், தேர்தல் வட்டாட்சியர் சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கிகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post 1,500க்கு மேல் வாக்காளர்கள் கொண்டவை பிரிக்கப்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 22 வாக்குச்சாவடிகள் அமைப்பு: மாவட்ட கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,District Collector ,T. Prabhu Shankar ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...