×

தமிழகத்திலேயே முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கால் தயாரிப்பு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக உயர்தர செயற்கை கால் தயாரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் இயற்பியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத்துறையின் கீழ் இயங்கும் செயற்கை அவயங்கள் துணை நிலையத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்ட செயற்கை கால்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மருத்துவமனை டீன் ரத்தினவேல், பயனாளிகள் 11 பேருக்கு செயற்கை கால்களை வழங்கினார். தொடர்ந்து டீன் ரத்னவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளிலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனை இயற்பியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத்துறையின் கீழ் இயங்கும் செயற்கை அவயங்கள் நிலையத்தில், எட்வர்ட் பிரான்சிஸ் என்பவருக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கிரேடு-3 என்னும் அதிக விலையுடைய, சர்வதேச உயர்தொழில் நுட்பம் கொண்ட அதிநவீன செயற்கை காலை தயார் செய்து வழங்கியுள்ளோம். அவருக்கு வழங்கப்பட்ட செயற்கை கால் அதிக வலிமையும், மிகக்குறைந்த எடையும், வெப்ப விரிவாக்கத்தையும் தாங்கும் சக்தி கொண்ட கார்பன் ஃபைபர் மல்டி ஆக்ஸிஸ் செயற்கை பாதத்தை கொண்டதாகும்.

இதன் மூலம் மாரத்தான் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் அவரால் மற்றவர்களைப் போல் இயல்பாக ஓட முடியும். மாரத்தான் போட்டிகளில் தொடரவேண்டும் என்ற அவருடைய கனவு நனவாகியுள்ளது. இவருடன் சேர்த்து மேலும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு எடை குறைந்த நவீன செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் இந்த குறிப்பிடத்தக்க சேவை இப்போது நிஜமாகியுள்ளது. இவ்வாறு கூறினார்.

The post தமிழகத்திலேயே முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கால் தயாரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madurai Government Hospital ,Madurai ,Department of Physiology and Rehabilitation ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...