×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 2 ஆயிரத்தை நெருங்கியது: கல்வி துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆர்வம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. மேலும், மாணவ, மாணவிகளை அரசு பள்ளிகளில் சேர்க்க மாவட்ட பள்ளி கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜுன் மாதத்தில் தொடங்கும். அதே நேரத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில் மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிடும். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை எடுத்தது.

அந்தவகையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மார்ச் 1ம் தேதி தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் வழங்கப்படும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டையும் பொதுமக்களிடையே எடுத்துச்சொல்லி மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக முதன்மை கல்வி அலுவலக வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். அதிகபட்சமாக காஞ்சிபுரம் ஒன்றியத்தில் மட்டும் 532 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் மார்ச் 13ம் தேதி மாலை நிலவரப்படி சேர்ந்துள்ள மாணவர்கள் விவரம்: காஞ்சிபுரம் ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் இருந்து 461 மற்றும் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி படித்துவிட்டு 1ம் வகுப்பு சேர்ந்தவர்கள் 71 பேர் என மொத்தம் 532 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

வாலாஜாபாத் ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் இருந்து 352 மற்றும் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி படித்துவிட்டு 1ம் வகுப்பு சேர்ந்தவர்கள் 40 என மொத்தம் 392 மாணவர்களும், உத்திரமேரூர் ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் இருந்து 320 மற்றும் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி படித்துவிட்டு 1ம் வகுப்பு சேர்ந்தவர்கள் 43 என மொத்தம் 363 மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது.

இதேபோல், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் இருந்து 387 மற்றும் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி படித்துவிட்டு 1ம் வகுப்பு சேர்ந்தவர்கள் 11 என மொத்தம் 398 மாணவர்களும், குன்றத்தூர் ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் இருந்து 293 மற்றும் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி படித்துவிட்டு 1ம் வகுப்பு சேர்ந்தவர்கள் 5 என மொத்தம் 298 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1983 மாணவர்கள் 1ம் வகுப்பு சேர்ந்துள்ளனர். இதனால், பள்ளி கல்வி துறை மாவட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் மேலும் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை கூட்ட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

* மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாமேரி, வட்டார கல்வி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், திருப்புட்குழி ஊராட்சியில் உள்ள காமராஜர் சிலை அருகில் இருந்து புதிதாக 1ம் வகுப்பு சேர்ந்த மாணவர்கள் 25 பேருக்கு கிரீடம், மலர்மாலை அணிவித்து பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். மேலும், மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பலகை மற்றும் எழுதுபொருட்களுடன் கூடிய மஞ்சப்பை வழங்கப்பட்டன. இதில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 2 ஆயிரத்தை நெருங்கியது: கல்வி துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram district ,Kanchipuram ,District ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...