×

தேர்தல் பத்திர விவகாரத்தில் அம்பலமாகும் அதிர்ச்சிகள் 41 நிறுவனங்கள் ரூ.2,010 கோடி நிதி: அமலாக்கத்துறை மூலம் மிரட்டி வசூல்; ரெய்டு நடந்த பிறகு கைமாறிய பணம்

இப்படியும் நடக்குமா என்று மலைக்கிற அளவுக்கு, பாஜவின் பத்தாண்டு ஆட்சியின் அவலங்கள் கொத்துக் கொத்தாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உச்ச அதிகாரத்தில் இருந்தால் எப்படியெல்லாம் விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டலாம் என்பதற்கு சாட்சியாக, முன்னுதாரணமாக சொல்லும் அளவுக்கு இந்த அவலங்கள் பாஜவின் நிஜ முகத்தை இப்போது தோலுரித்து காட்டிக் கொண்டிருக்கின்றன. அதிலும், தேர்தல் பத்திர விவகாரம் பெரும் பரபரப்பையும், பதைபதைப்பையும் ஏற்படுத்தி விட்டது. எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு வழங்கியது என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு விவரங்களை தனித்தனியாக எஸ்பிஐ, தேர்தல் ஆணையம் வெளியிட்டன.

இதை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டப்பட்ட நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜவுக்கு நன்கொடை கொடுத்ததுதான் அது. ஏற்கெனவே, அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டில் சிக்கியிருந்த 30 நிறுவனங்கள் பாஜவுக்கு ரூ.355 கோடி கொடுத்த விவரம் கடந்த மாதமே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, 41 நிறுவனங்கள் 18 பத்திரங்கள் மூலமாக மட்டும் மொத்தம் ரூ.2,010.5 கோடியை பாஜவுக்கு அள்ளிக் கொடுத்துள்ளன.

இதில் ஐஆர்பி இன்ப்ராஸ்டிரக்சர் டெவலப்பர்ஸ், சாம் டிஸ்டிலரீஸ், ஸ்ரீசிமெண்ட்ஸ், ஹெட்டீரோ குரூப், திரிவேணி எர்த் மூவர்ஸ் போன்ற உள் கட்டமைப்பு நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் அடங்கும். மத்திய பிரதேசத்தை சேர்ந்த கேஜெஎஸ் சிமெண்ட் ரூ.14 கோடி, எம்பிஎம்எல் ஓம் மெட்டல் எனப்படும் ஓம் கோத்தாரி குழும நிறுவனம் ரூ.5 கோடி வழங்கியுள்ளன. ஓம் மெட்டல்ஸ் நிறுவனத்தில் 2020 ஜூலையில் ஐடி ரெய்டு நடந்தது. 2021 அக்டோபர் 4ம் தேதி ரூ.5 கோடியை பாஜவுக்கு தேர்தல் நிதியாக இந்த நிறுவனம் வழங்கியுள்ளது.

டிரைடெண்ட் லிமிடெட்: பஞ்சாப்பை சேர்ந்த இந்த நிறுவனம் பத்ம விருது பெற்றவரான ராஜேந்தர் குப்தாவுக்கு சொந்தமானது. இந்த நிறுவனம் 2023 அக்டோபர் 5 மற்றும் 6 தேதிகளில் ரூ.7 கோடியை பாஜவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் வழங்கியுள்ளது. கெப்பாசிட் இன்ப்ரா புராஜெக்ட்ஸ்: மும்பையை சேர்ந்த இந்த நிறுவனம் 2023 ஏப்ரல் 6 மற்றும் 12ம் தேதிகளில் மொத்தம் ரூ.7 கோடியை பாஜவுக்கு வழங்கியுள்ளது.

* ஒய்எஸ்ஆர் காங். எம்பியையும் விட்டு வைக்காக பாஜ
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்பி அயோத்யா ராமி ரெட்டி. இவருக்கு சொந்தமானதுதான் ராம்கி குரூப். இந்த குழுமம் சென்னை கிரீன் உட்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறது. 2021 ஜூலை 6ம் தேதி ராம்கி குழுமத்தில் ஐடி ரெய்டு நடந்தது. பல ஒன்றிய விசாரணை அமைப்புகளின் வளையத்தில் இவர் சிக்கியிருந்தார். இதையடுத்து இவரது நிறுவனம் 2022 ஜனவரி 5 முதல் 2023 அக்டோபர் 12 வரை ரூ.105 கோடியை தேர்தல் பத்திரம் மூலம் பாஜவுக்கு வழங்கியுள்ளது.

* சேலம் நிறுவனம் தாராள நிதி
திரிவேணி எர்த் மூவர்ஸ் என்ற பி.பிரபாகரன் என்பவரின் சேலத்தை சேர்ந்த நிறுவனம் 2014-15ல் ரூ.89.99 லட்சம், 2016-17ல் ரூ.20 லட்சம் 2017 ஜூலையில் ரூ.3 லட்சத்தை பாஜவுக்கு தேர்தல் நிதியாக வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான திரிவேணி சைனிக் மைனிங் பிரைவேட் லிமிடெட் 2021 ஏப்ரல் 9 முதல் 2023 அக்டோபர் 13 வரை ரூ.11 கோடி வழங்கியுள்ளது.

* ஐஆர்பி இன்ப்ராஸ்டிரக்சர் டெவலப்பர்ஸ் மோசடி புகாரில் ரெய்டு: அடுத்தடுத்து நிதி போச்சு
இந்த நிறுவனம், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இதன் உரிமையாளர் வீரேந்திர மாய்ஸ்கர். இவரது நிறுவனத்தில்2015ம் ஆண்டு சிபிஐ ரெய்டு நடத்தியது. இந்த நிறுவனதின் துணை நிறுவனங்களான மாடர்ன் ரோடு மேக்கர்ஸ் மற்றும் ஐடியல் ரோடு பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2014ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பாஜவுக்கு ரூ.84 கோடியை கொடுத்துள்ளன. ரெய்டு நடத்துவதாக மிரட்டி முதலில் வாங்கியதும், ரெய்டுக்கு பின்னர் தொடர்ந்து 2019 ஏப்ரல் 16 முதல் 2023 ஜூலை 4 வரை மாடர்ன் ரோடு மேக்கர்ஸ் ரூ.53 கோடி, ஐஆர்பி எம்பி எக்ஸ்பிரஸ்வே ரூ.25 கோடிக்கும், 2023 அக்டோபர் 4ல் ஐடியல் ரோடு பில்டர்ஸ் ரூ.6 கோடியும் பாஜவுக்கு நிதி வழங்க தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளன.

* வசமாக மாட்டிய மருந்து கம்பெனிகள் மதுபான கொள்கை வழக்கில் சிக்கிய நிறுவனத்திடம் வசூல்
அரபிந்தோ பார்மா: ஐதராபாத்தை சேர்ந்த இந்த பார்மா நிறுவனம், அரபிந்தோ ரியாலிடி அண்ட் இன்ஸ்ப்ரா ஸ்டிரக்சர் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. 2022 நவம்பரில் இந்த நிறுவனத்தின் இயக்குநர் சரத் ரெட்டியை அமலாக்கத்துறை டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்புள்ளதாக கூறி கைது செய்தது. இதன் பிறகு இந்த நிறுவனம் 2021 ஏப்ரல் 3 முதல் 2023 நவம்பர் 8ம் தேதி வரை பாஜவுக்கு ரூ.52 கோடியை தேர்தல் பத்திரம் மூலம் வழங்கியுள்ளது.
மைக்ரோ லேபம்: டோலோ 650 தயாரிக்கும் பெங்களூருவை சேர்ந்த இந்த நிறுவனத்தை திலீப் மற்றும் ஆனந்த் சுரானா சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். 2022 ஜூலையில் இந்த நிறுவனத்தின் 40 இடங்களில் ஐடி ரெய்டு நடந்தது. ஐடி ரெய்டுக்கு முன்பும் பின்பும் இந்த நிறுவனத்திடம் பாஜ நிதி வசூலித்துள்ளது. அதாவது 2015-16 ல் ரூ.21 லட்சம், 2017-18ல் ரூ.9 கோடி, 2022-3ல் ரூ.3 கோடி என மொத்தம் பல்வேறு தவணைகளில் ரூ.16 கோடியை பாஜவுக்கு நிதியாக வழங்கியுள்ளது.
ஆல்கெம் லேபோரட்டரீஸ்: சம்பிரதா சிங் மற்றும் பிஎன் சிங் ஆகியோரால் 1973ல் துவங்கப்பட்டது இந்த நிறுவனம். நவிமும்பை அருகே தலோஜாவில் முதலாவது ஆலையை அமைத்தது. இந்த நிறுவனம் 2020-21ல் ரூ.1 கோடி, 2022-23ல் ரூ.25 லட்ச்ததை பாஜவுக்கு நிதியாக வழங்கியுள்ளது. 2023 செப்டம்பரில் ரெய்டு நடந்தது. 2022 நவம்பர் 14ல் ரூ.15 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது.

* சாம் டிஸ்டிலரீஸ் அப்பாடா விட்டுட்டாங்க… அடுத்தது கொடுத்துட்டாங்க…
மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்த நிறுவனத்தில் கடந்த ஆணடு வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. விசாரணைக்கு பிறகு இந்த நிறுவன பங்குதாரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த 10 நாட்களிலேயே இந்த நிறுவனம் பாஜவுக்கு நிதி வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் நிதியாக ரூ.3 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் செலுத்தியுள்ளது.

* ஸ்ரீசிமெண்ட்ஸ் நிறுவனம்
கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீசிமெண்ட்ஸ் உரிமையாளர் ஹரி மோகன் பாங்கூர், இந்த நிறுவனம் ரூ.7.5 கோடியை தேர்தல் பத்திரம் மூலம் பாஜவுக்கு வழங்கியுள்ளது. இதில் 2019 மே 8ல் ரூ.1.5 கோடி, 2020 ஜனவரி 21ல் ரூ.4 கோடி, 2020 அக்டோபர் 21ல் ரூ.2 கோடி வழங்கியுள்ளது. இதுதவிர பாகுர் ஸ்ரீ என்ற பெயரில் 2020 ஜனவரி 21ம் தேதி ரூ.40 லட்சத்துக்கு பாஜ பெயரில் தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

* ரெய்டுக்கு பயந்து அள்ளிக் கொடுத்த பிஆர்எஸ் எம்பி
ஐதராபாத்தை சேர்ந்த இந்த மருந்து தயாரிப்பு குழுமம் ஹெட்டீரோ குரூப். இந்த குழுமத்தில் ஹெட்டீரோ டிரக்ஸ், ஹெட்டீரோ லேப்ஸ், ஹெட்டீரோ பயோபார்மா நிறுவனங்கள் உள்ளன. இந்த குழுமம் பிஆர்எஸ் மாநிலங்களவை எம்பி பார்த்தசாரதி ரெட்டிக்கு சொந்தமானது. அந்த கட்சியின் பெரும் பணக்கார எம்பியும் இவர்தான். ஹுருண் இந்தியா 2021ல் வெளியிட்ட இந்திய பணக்காரர் பட்டியலில் அப்போது 2ம் இடத்தில் இருந்தவர். இந்த பட்டியல் வெளியான 2 நாளில் அதாவது, 2021ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹெட்டீரோ லேப்சின் 20 இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. அதன்பிறகு இவரது குழுமத்தில் உள்ள மேற்கண்ட 3 நிறுவனங்களும் 2022 ஏப்ரல் 7ம் தேதி முதல், 2023 அக்டோபர் 12ம் தேதி வரை ரூ.60 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜவுக்கு வழங்கியுள்ளன.

* என்னது பணக்கார பெண்ணா? முதல்ல ரெய்டு வுடுங்க சார்…
மும்பையை சேர்ந்த யுஎஸ்வி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை லீனா காந்தி திவாரி என்ற பெண் நடத்தி வருகிறார். இந்திய பணக்கார பெண் தொழிலதிபர்களில் இவரும் ஒருவர். இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் 2017ம் ஆண்டு ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. ரெய்டு நடத்தி ஒரு மாதத்திலேயே பாஜவுக்கு இவர் ரூ.9 கோடியை பாஜவுக்கு வழங்கியுள்ளார். மேலும், 2022 நவம்பர் 15ம் தேதி ரூ.10 கோடி மதிப்புக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளார்.

The post தேர்தல் பத்திர விவகாரத்தில் அம்பலமாகும் அதிர்ச்சிகள் 41 நிறுவனங்கள் ரூ.2,010 கோடி நிதி: அமலாக்கத்துறை மூலம் மிரட்டி வசூல்; ரெய்டு நடந்த பிறகு கைமாறிய பணம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...