×

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவல் மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு: பிற்பகல் 3 மணிக்கு அட்டவணை வெளியீடு

* ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல், ஒடிசாவுடன் ஜம்மு காஷ்மீரிலும் தேர்தல் நடத்த வாய்ப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. 17வது மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதி முடிகிறது. மக்களவையுடன் சேர்த்து ஆந்திரா, சிக்கிம், அருணாச்சலபிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் முடிவதால் அங்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றார். அவரை தொடர்ந்து மார்ச் 8ம் தேதி இன்னொரு தேர்தல் ஆணையர் அருண்கோயல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி தலைமையில் புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய நடந்த கூட்டத்தில் 1988ம் ஆண்டு கேரளா கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஞானேஷ் குமார், உத்தரகாண்ட் கேடர் ஐஏஎஸ் அதிகாரி சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று காலை புதிய தேர்தல் ஆணையர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

அதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 18வது மக்களவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். மேலும் சில சட்டப்பேரவை தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தது. எனவே இன்று பிற்பகல் 3 மணிக்கு மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அட்டவணை வெளியாகிறது. அப்போது ஆந்திரா, சிக்கிம், அருணாச்சலபிரதேசம்,ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட உள்ளன. மேலும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அங்கு 2018 நவம்பர் 21ம் தேதி சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. அதன்பின் இதுவரை அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும் காஷ்மீர் என்ற மாநிலம் கலைக்கப்பட்டு யூனியன்மாக பிரிக்கப்பட்டது.

2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் மார்ச் 5ம் தேதி வெளியிடப்பட்டது. 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் மார்ச் 10ம் தேதி வெளியானது. ஏப்ரல் 11 முதல் மே 23 வரை 7 கட்டமாக நடத்தப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான தேர்தல் தேதி இன்று வெளியாகிறது. வழக்கம் போல் 7 கட்டமாக நடத்தப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்பது இன்று தெரிந்து விடும். இந்த தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 97 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 12 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துவிடும்.

* தேர்தல் அறிவிப்பு முன்பே அரசியல் கட்சிகள் தயார்

மக்களவை தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே பா.ஜ, காங்கிரஸ் கட்சிகள் 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. பா.ஜ சார்பில் 267 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 82 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முக்கிய இடங்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. அதிமுக மற்றும் பா.ஜ தலைமையிலான கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை.

* புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க மறுப்பு

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சாந்து நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேற்று உச்ச நீதிமன்றநீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இதுதொடர்பான மனுக்களை மார்ச் 21ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.

* மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்

காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,’ மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (இவிஎம்) பயன்படுத்தாமல், மீண்டும் வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். வாக்காளர்கள் பதிவிட்ட வாக்குகள் சரியாக பதிவாகியிருக்கின்றனவா என்பதை உறுதி செய்யும் விவிபேட், இவிஎம் இயந்திரத்துடன் இணைக்கப்படும். அந்த விவிபேட் எண்ணிக்கையை நூறு சதவீதம் எண்ண வேண்டும். சில விவிபேட் மட்டுமே எண்ணப்படுகிறது. ஆனால் அனைத்து விவிபேட்-களையும் எண்ண வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது’ என்று கார்கே கூறினார்.

The post தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவல் மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு: பிற்பகல் 3 மணிக்கு அட்டவணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Lok ,Andhra Pradesh ,Sikkim ,Arunachal ,Odisha ,Jammu ,Kashmir ,New Delhi ,Chief Election Commission ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல் பரப்புரை தொடர்பாக...