×

ஐ.டி., ஈ.டி ரெய்டு நடத்தி, மிரட்டி பாஜவின் ரூ.6060 கோடி தேர்தல் பத்திர ஊழல்: உச்ச நீதிமன்ற அதிரடி உத்தரவால் அம்பலத்துக்கு வந்தது

சென்னை: அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலம் பெரு நிறுவனங்களில் சோதனை நடத்தி, மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6060 கோடி ஊழல் செய்ததாக பாஜ மீது தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு ஆதாரமாக ரெய்டு நடத்தப்பட்ட நிறுவனங்கள் ஓரிரு நாளில் பல நூறு கோடிகளில் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது உச்ச நீதிமன்ற அதிரடி உத்தரவுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியது. மேலும், தேர்தல் பத்திரங்கள் வாங்கும் நிறுவனங்கள், வாங்கும் கட்சிகளின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த விவரங்களை அளிக்க முடியாது என்றும் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

இந்த திட்டத்தின் மூலம் ஆளும் கட்சி பெரும் நிதி பெறுவதாகவும், ஆளும் கட்சிக்கு நிதி கொடுக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தியும், மிரட்டியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் கட்சி நிதி திரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், தேர்தல் பத்திர நன்கொடை திட்டம் ரத்து செய்யப்படுவதாக கடந்த மாதம் 15ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பாரத ஸ்டேட் வங்கியோ, தரவுகளை வெளியிட ஜூன் மாதம் வரை கூடுதல் அவகாசம் கேட்டது. தேர்தல் முடிந்த பிறகு வெளியிடலாம் என்று கருதியே கால அவகாசம் கேட்பதாக சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டியிருந்தன. உச்சநீதிமன்றம், இதற்கு மறப்பு தெரிவித்ததோடு, 12ம் தேதி தேர்தல் ஆணையத்திடம், தன்னிடம் உள்ள தரவுகளை பாரத ஸ்டேட் பாங்க் வழங்க வேண்டும்.

பின்னர் 15ம் தேதி அந்த விவரங்களை இணைய தளங்களில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து ஸ்டேட் பாங்க், 12ம் தேதி தரவுகளை வழங்கியது. அந்த தரவுகளை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. மொத்தம் 763 பக்கங்கள் கொண்ட தரவுகளில் 337 பக்கங்கள், கம்பெனிகள் தேர்தல் பத்திரங்களை வாங்கியதற்கான ஆவணங்களாகும். 426 பக்கங்கள், அரசியல் கட்சிகள் பணமாக்கிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதி வழங்கியது என்ற விவரங்களைக் கொண்ட தகவல்களை ஸ்டேட் பாங்க் வெளியிடவில்லை.

ஆனாலும் அறைகுறையாக வெளியிடப்பட்ட தேர்தல் பத்திரங்களே பெரும் பூகம்பத்தை உருவாக்கி விட்டது. அதில் ஆளும் கட்சியான பாஜ மட்டும் ரூ.6060 கோடி தேர்தல் பத்திரம் மூலம் பணமாக்கியிருந்தது வெளியானது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்கள் ஓரிரு நாளில் பல நூறு கோடிகளை கொட்டி தேர்தல் பத்திரங்களை வாங்கியதும், அதன்பின்னர் அந்த நிறுவனங்கள் மீதான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருந்ததும் அம்பலதுக்கு வந்தன. அதோடு, பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய சில நாட்களிலேயே பல ஆயிரம் அல்லது பல நூறு கோடி ரூபாய்க்கு டெண்டர் வாங்கியிருந்ததும் அம்பலத்துக்கு வந்து விட்டது.

இதனால் அமலாக்கத்துறை மூலம் மிரட்டப்படுவதாக கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தற்போது இந்த தேர்தல் பத்திர ஊழல் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில், கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழில் அதிபர் மார்ட்டின் ரூ.1368 கோடி தேர்தல் பத்திரமாக வாங்கியுள்ளார். இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் பல முறை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. ஒவ்வொரு முறை சோதனை நடத்தும் ஓரிரு நாளில் அவர் பல நூறு கோடி ரூபாயாக தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளார். இவர்தான் பாஜவுக்கு அதிக அளவில் நிதி கொடுத்தவராக உள்ளார்.

அதேபோல, அரபிந்தோ பார்மா என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் 2022ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனால் 15ம் தேதி பல நூறு கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. டாக்டர் ரெட்டிஸ் என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அடுத்த நான்கு நாட்களில் பல நூறு கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளார். அதேபால கலபத்ரு ப்ராஜெக்ட் என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

அக்டோபர் மாதம் 10ம் தேதி அந்த நிறுவனம் பல நூறு கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்களை வாங்கியது. ஹீரோ மோட்டோ கார்ப் என்ற நிறுவனத்தில் 2022 மார்ச் 31ல் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இதனால் அக்டோபர் 10ம் தேதி தேர்தல் பத்திரங்களை அந்த நிறுவனம் வாங்கியது. மைக்ரோ லேப்ஸ் என்ற நிறுவனத்தில் 2022 ஜூலை 14ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதே ஆண்டு அக்டோபர் 10ம் தேதி தேர்தல் பத்திரங்களை அந்த நிறுவனம் பல நூறு கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் யசோதா மருத்துவமனையில் 2020 டிசம்பர் 26ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதனால் 2021 முதல் 2023 வரை தொடர்ந்து பல நூறு கோடி ரூபாயக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அதேபோல டோரென்ட் பவர் என்ற நிறுவனம் கடந்த ஜனவரி 10ம் தேதி தேர்தல் பத்திரத்தை பல நூறு கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதனால் 1540 கோடி ரூபாய்க்கான டெண்டர் அந்த நிறுவனத்தக்கு வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை மூலம் 41 நிறுவனங்களை மிரட்டி ரூ.2010 கோடி நிதியை பாஜ பெற்றுள்ளது. அதேபோல சீரம் நிறுவனத்துக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி மருந்து வாங்க ஒன்றிய அரசு ஆர்டர் கொடுத்தது. இதனால் அந்த நிறுவனம் பல நூறு கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் ஆளும் கட்சிக்கு கொடுத்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்த விலையில் வெளிநாட்டில் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்க திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியது. ஆனால் ஒன்றிய அரசோ, அதற்கு அனுமதி மறுத்ததுடன் கொரோனா மருந்துகளை நாங்கள்தான் வாங்கிக் கொடுப்போம் என்று கூறியதோடு, அதற்காக சிறப்பு சட்டத்தையும் இயற்றியது. இவ்வாறு, எந்தெந்த வழிகளில் எல்லாம் ஆளும் ஒன்றிய பாஜக அரசு தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்களை அமலாக்கத்தறை மற்றும் வருமான வரித்துறை மூலம் மிரட்டி பணம் வாங்கி ஊழல் செய்தது ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள இந்த நேரத்தில் உச்சநீதின்றத்தின் நேர்மையான, துணிச்சலான நடவடிக்கை மூலம் ஆளும் ஒன்றிய அரசின் ரூ.6060 கோடி அளவிலான மிகப் பெரிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தற்போது கையில் எடுத்துள்ளன. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதிக்கும், நீதிமன்றத்துக்கும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளன. இது தேர்தல் களத்தில் கடும் அரசியல் சூட்டை கிளப்பியுள்ளது.

The post ஐ.டி., ஈ.டி ரெய்டு நடத்தி, மிரட்டி பாஜவின் ரூ.6060 கோடி தேர்தல் பத்திர ஊழல்: உச்ச நீதிமன்ற அதிரடி உத்தரவால் அம்பலத்துக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : I. D. ,election ,De Raid ,Mritti Baja ,Supreme Court ,CHENNAI ,BAJA ,PERU ,Mirati Bajaj ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை...