×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள், இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக்கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது: இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளேன்.

கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தான் கோரியிருந்தேன். ஆனால் இன்று (15.03.2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த கொந்தளிப்பும், விரக்தியும் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்குத் தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வு காண வேண்டியது மிக அவசியம்.எனவே. இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அதன்மூலம் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்க மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Union ,Minister ,Sri Lankan Navy ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Indian border ,Minister of State ,Uddhav Thackeray ,Sri Lanka Navy ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...