×

வட சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவு: யானைகவுனி மேம்பாலம் திறப்பு.! தயாநிதிமாறன் எம்பி திறந்து வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராயபுரம் மண்டலம், வார்டு-57க்குட்பட்ட யானைக்கவுனி பகுதியில் ரூ.71.26 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் முடிவுற்ற ஒருவழிப் பாதையினை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு-57ல் அமைந்துள்ள யானைக்கவுனி மேம்பாலமானது சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதைகளுக்கு மேல் அமைந்துள்ளது. இந்தப் பாலம் வால்டாக்ஸ் சாலையையும், ராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பாலமாகும். இப்பாலம் மிகவும் பழமையானதாகவும், பழுதடைந்த நிலையிலும் இருந்ததால் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இப்பாலத்தில் 50 மீ. நீளமுள்ள பகுதி ரயில்வே துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது, இந்தப் பகுதியை இடித்துவிட்டு 156.12 மீ. அளவிற்கு ரயில்வே துறையின் மூலம் பாலம் அமைக்கவும், பாலத்தின் இருபுறமும் 364.23 மீ. அளவிற்கு சாய்தள சாலை சென்னை மாநகராட்சியாலும் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதனடிப்படையில், வால்டாக்ஸ் சாலையின் பக்கம் 165.24 மீ. மற்றும் ராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீ. நீளத்திற்கு சாய்தள சாலை மாநகராட்சியின் சார்பில் மூலதன நிதியின் கீழ், ரூ.30.78 கோடி மதிப்பிலும், ரயில்வே துறையின் மூலம் ரூ.40.48 கோடி மதிப்பிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் வால்டாக்ஸ் சாலையிலிருந்து, ராஜா முத்தையா சாலையை சென்றடையும் வகையில் ஒழிவழிப்பாதை முடிக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையின் மையப் பகுதி, புரசைவாக்கம், எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி செல்லலாம். இதனை தொடர்ந்து தயாநிதி மாறன் எம்பி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ரயில்வே துறை மேலும் காலம் தாழ்த்தாமல் மேம்பாலத்தின் மற்றொரு வழிதடத்தின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கவேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உச்சமாக உயர்த்தப்பட்டதற்கே பாஜக அரசு தான் காரணம். தற்போது தேர்தல் நேரம் என்பதால் பிரதமர் மோடி விலை குறைப்பது போல் வேஷம் போடுகிறார். மழை வெள்ளம் பாதிப்புகளின் போது மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்ற சுயநலத்தோடு தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார். இவ்வாறு தெரிவித்தார்.

The post வட சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவு: யானைகவுனி மேம்பாலம் திறப்பு.! தயாநிதிமாறன் எம்பி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Yanayakouni ,Dayanitimaran ,Chennai ,Central Chennai ,Yanakauni ,Ward ,Rayapuram Zone ,Port Assembly Constituency ,Parliament ,Dayanidhi Maran ,
× RELATED வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய...