×

புலிக்கு பயந்தவர் எல்லாம் என் மீது ஏறி கொள்ளுங்கள் என்பது போல் பாஜக கூட்டணி இருக்கின்றது: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்


சென்னை: கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களை காத்திடும் வகையில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, பாரிமுனை, காளிகாம்பாள் திருக்கோயிலில் கடும் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களை காத்திடும் வகையில் நடைபாதைகளில் வெப்பத்தை தணிக்கும் வகையிலான பணிகளை மேற்கொண்டு, நீர் மோர் மற்றும் எலுமிச்சை பானம் போன்றவற்றை பக்தர்களுக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; முதலமைச்சரின் உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(3) ன் கீழ் செயல்படுகின்ற 578 திருக்கோயில்களில் கடும் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களை காத்திடும் வகையில் தற்காலிக கீற்று பந்தல்கள் அமைத்திடவும், நடைபாதை தளங்களில் வெப்பத்தை தடுக்கும் வெள்ளை நிற வர்ணம் பூசவும், தேங்காய் நார் விரிப்புகள் அமைத்திடவும், அவ்வபோது தரைதளத்தில் தேவையான அளவிற்கு தண்ணீர் பீய்ச்சி வெப்பத்தை தணித்து பக்தர்கள் நடந்து செல்ல ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திருக்கோயில்களில் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், நீர் மோர் மற்றும் எலுமிச்சை பானம் போன்றவற்றை கோடை காலம் முடியும் வரை வழங்கிடவும் திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் திட்டத்தினை அந்தந்த திருக்கோயில்களின் அறங்காவலர்கள் முழு வீச்சில் செயல்படுத்துவார்கள். இத்திட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள விரும்பி பொதுமக்கள் பங்களிப்பு அளித்தால் வரவேற்கப்படும். இப்பணிகளை மண்டல இணை ஆணையர்களும், தலைமையிடத்திலிருந்து கூடுதல் ஆணையரும் கண்காணிப்பர். இன்றைய தினம் இத்திட்டத்தை அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் தொடங்கி வைத்துள்ளோம். திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,477 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதோடு, கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் 5,000 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள ரூ.100 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டிற்கு 2,500 திருக்கோயில்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு கூட்டத்தில் கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்ற பகுதி திருக்கோயில் திருப்பணிக்கான நிதியுதவி ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் இதுவரை 17,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இதற்காக அரசு மானியம் ரூ.200 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒருகால பூஜை திட்ட திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு முதல்முறையாக மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு சிறப்புப் பணி அலுவலர் திரு.குமரகுருபரன் அவர்கள் முழு முனைப்பாக பணியாற்றினார் என்பதனை கூற கடமைப்பட்டுள்ளேன். இந்த அரசு பொறுப்பேற்றபின் 33 மாதங்களில் திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.5,979 கோடி 6,810 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. ரூ.3,696 கோடி மதிப்பிலான 9,376 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வரும் ஆண்டுகளில் சுமார் 18,000 பணிகளை ஒட்டுமொத்தமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியானது, தமிழையும், தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் ஆன்றோர் சான்றோர்களுக்கும் சிறப்பு செய்கின்ற ஆட்சியாகும்.

அந்த வகையில் மயிலாப்பூரில் அமைந்திருக்கின்ற திருவள்ளுவர் திருக்கோயிலை ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து குடமுழுக்கு நடத்திட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல திருவொற்றியூரில் திருவள்ளுவர் திருக்கோயிலில் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அத்திருக்கோயிலையும் புனரமைத்து கட்டிட துறையின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இதுவே தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கின்ற ஆட்சி முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி என்பதற்கு சான்றாகும்.
தேர்தல் பத்திரம் குறித்து கேட்டீர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான நிதி என்பது தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வெளிப்படை தன்மையுடையதாகும். யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ பெறப்பட்ட நிதி அல்ல. பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கப்பட்ட நிதியின் கால அளவை பார்த்தால் அந்த காலங்களில் அவர்களுடன் தோழமை கொண்டிருக்கின்ற அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவை ஏதாவது ஒரு வகையில் நிதி அளித்தவர்களிடம் நெருங்கி இருப்பார்கள். ஆகவே வழங்கப்பட்ட நிதிகளுக்கு வித்தியாசம் இருக்கின்றது. திமுக-விற்கான நிதி முழுமையாக தானாக முன்வந்து வெளிப்படையாக தரப்பட்ட நிதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி தண்ணீருக்கு அடியில் சென்று தவம் இருந்தாலும் சரி, தரையின் மீதும் வான்மார்க்கமாக சென்றும் பயணம் மேற்கொண்டாலும் சரி, நடந்து வந்தாலும் சரி, ஓடி வந்தாலும் சரி, உருண்டு வந்தாலும் சரி பாரதிய ஜனதாவிற்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் எந்தவிதமான அங்கீகாரத்தையும் மக்கள் வழங்க மாட்டார்கள். முதலமைச்சர் தலைமையிலே அமைந்திருக்கின்ற இந்தியா கூட்டணி வலிவோடும், தெளிவோடும், பொலிவோடும் இருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளுகின்ற அஞ்சா நெஞ்சத்தோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவர் முதலமைச்சர்.

தமிழ்நாட்டு மக்களுக்கு கடந்த 33 மாதங்களில் கிடைத்துள்ள எண்ணற்ற நலத்திட்டங்கள் வாயிலாக கடந்த சட்டமன்றத் தேர்தலை விட இந்த நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான ஆதரவை தமிழக மக்கள் அளிப்பார்கள் என்று நம்புகிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த அளவில் ஏற்கனவே அமைக்கப்பட்ட உறுதிமிக்க கூட்டணியில் அதிகமான கட்சிகள் தான் இணைந்து கொண்டு இருக்கின்றன. கமலஹாசன் அவர்களின் மக்கள் நீதி மையம் கூட கூட்டணியில் சேர்ந்து இருக்கிறது. ஆகவே பலம் வாய்ந்த கூட்டணி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கின்ற இந்தியா கூட்டணி. புலிக்கு பயந்தவர் எல்லாம் என் மீது ஏறி கொள்ளுங்கள் என்பது போல் பாஜக கூட்டணி இருக்கின்றது.

யார் யாரோடு சேர்வார்கள் என்று இன்னும் கூட நிர்ணயிக்க முடியாத சூழ்நிலை. ஆனால், எந்தெந்த கட்சிகளுடன், கூட்டணி எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்று முதன் முதலில் அறிவித்த தெளிவு, துணிவு மிக்க இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா ராஜன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் அ. சங்கர், இணை ஆணையர்கள் ச.லட்சுமணன், ஜ. முல்லை, துணை ஆணையர் ஆர். ஹரிஹரன், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் E.M.S. மோகன், அறங்காவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post புலிக்கு பயந்தவர் எல்லாம் என் மீது ஏறி கொள்ளுங்கள் என்பது போல் பாஜக கூட்டணி இருக்கின்றது: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP alliance ,Minister ,Sekharbhabu ,Chennai ,Hindu ,Religious ,Affairs ,P. K. Sekarpapu ,Chief Minister ,Mu. K. ,Stalin ,P. K. Sekarbabu ,Parimuna ,Kalikambala ,
× RELATED வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால்...