×

சமூக ஆர்வலர் கொலை வழக்கில் 7 பேரின் ஆயுள் தண்டனை ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மார்ச் 15: திருவண்ணாமலை ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா, கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு, கனிம வள கொள்ளை ஆகியவற்றை அம்பலப்படுத்தியதால் அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை நகர போலீசார், அப்போதைய கவுன்சிலராக இருந்த அதிமுகவை சேர்ந்த திருப்பதி பாலாஜி (எ) வெங்கடேசன், அவரது தந்தை காசி (எ) வீராசாமி, சகோதரர் செல்வம், அவரது மனைவி மீனாட்சி, முருகன், சடையன், சந்திரசேகரன், ஐயப்பன், விஜயராஜ் மற்றும் சுப்ரமணி ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை காலத்தில் வீராசாமி, செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர். மீதமுள்ள 8 பேருக்கு எதிரான வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சந்திரசேகர் தவிர 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்றது.

அப்போது, மனுதாரரகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ராம் வழக்கறிஞர்கள் ஜி.உமா மகேஸ்வரி, எஸ்.ஷேக் இஸ்மாயில், வி.ராஜ்மோகன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிடும்போது, கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாக ஒருவர் மட்டுமே இருந்ததாக சொல்லப்படும் நிலையில் அவரது சாட்சியத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து தண்டனை விதித்தது தவறு என்று வாதிட்டனர். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆவணங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் முன்னுக்கு பின் முரண்கள் உள்ளன. குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, 7 பேரையும் விடுதலை செய்து இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

The post சமூக ஆர்வலர் கொலை வழக்கில் 7 பேரின் ஆயுள் தண்டனை ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajmohan Chandra ,Tiruvannamalai Rajiv ,Gandhi ,Nagar ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...