×

காட்டுப்பாக்கம் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

பூந்தமல்லி, மார்ச் 15: பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுப்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு பள்ளிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுப்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளியில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது. பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு அரசு பள்ளியின் முக்கியத்துவம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டு சென்றனர். பேரணி பள்ளியில் இருந்து புறப்பட்டு காட்டுப்பாக்கம், கோபுரசநல்லூர் பகுதிகளின் முக்கிய சாலைகள், தெருக்கள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரத்தால் தற்போது இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளை மிஞ்சிடும் அளவிற்கு இந்த பள்ளியில் உள்கட்டமைப்பு வசதி, அடிப்படை வசதி, நவீன தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு கல்வியிலும், தரத்திலும் சிறந்து விளங்கி மாதிரி பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மட்டுமின்றி அடுத்த ஆண்டிற்கும் 25 மாணவர்கள் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்தப் பள்ளியில் உயர் அதிகாரிகள், மென்பொறியாளர்கள், செல்வந்தர்களின் வீட்டுப் பிள்ளைகள் அதிக அளவில் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post காட்டுப்பாக்கம் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Kattupakkam Government School ,Poontamalli ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ