×

வேட்பாளர் செலவின பட்டியலில் 40 வகையான உணவு விலை வெளியீடு அரைபிளேட் மட்டன் பிரியாணி ₹250

வேலூர், மார்ச் 15: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவின பட்டியலில் 40 வகையான உணவு விலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரை பிளேட் மட்டன் பிரியாணி ₹250 என்று தேர்தல் ஆணையம் விலைபட்டியல் வெளியிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்களின் செலவினம் கணக்கில் கொள்வது குறித்த விவரங்களை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி வெளியிட்டார். அதில் வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனம், கொடி, கட்அவுட், பிளக்ஸ் பேனர், மைக் செட், உணவு, தங்குமிடம் உள்ளிட்டவை குறித்த செலவினங்களுக்கு விலை பட்டியல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் 40 வகையான உணவு வகைகளுக்கு நகரம், கிராம பகுதிகள் என்று தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாப்பாடு நகரத்தில் ₹100, கிராமத்தில் ₹80, மட்டன் பிரியாணி அரை பிளேட் நகரத்தில் ₹250, கிராமத்தில் ₹200, சிக்கன் பிரியாணி அரை பிளேட் நகரத்தில் ₹200, கிராமத்தில் ₹150, முட்டை பிரியாணி நகரத்தில் ₹90, கிராமத்தில் ₹80 வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் ஆகியவை நகரத்தில் ₹55, கிராமத்தில் ₹45, பரோட்டா ஒரு செட் நகரத்தில் ₹55, கிராமத்தில் ₹45, இட்லி ஒன்று நகரத்தில் ₹17.50, கிராமத்தில் 15 வரையும், பொங்கல் ஒரு கப் நகரில் ₹55, கிராமத்தில் ₹45, பூரி ஒரு செட் நகரத்தில் ₹60, கிராமத்தில் ₹45, வடை ஒன்று நகரில் ₹18 கிராமத்தில் 10, தோசை ஒன்று நகரில் ₹55, கிராமத்தில் ₹45 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பட்டாசு வகையில் ஆயிரம் வாலாவுக்கு ₹700ம், 2000 வாலாவுக்கு ₹1,100ம், 5 ஆயிரம் வாலாவுக்கு ₹1500ம், 10 ஆயிரம் வாலாவுக்கு ₹2 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது, பிளாஸ்டிக் கொடி மற்றும் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வேட்பாளர் செலவின பட்டியலில் 40 வகையான உணவு விலை வெளியீடு அரைபிளேட் மட்டன் பிரியாணி ₹250 appeared first on Dinakaran.

Tags : Vellore ,Election Commission ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...