×

கட்சி மேலிடம் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் புதுச்சேரியில் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் திணறும் பாஜ

புதுச்சேரி, மார்ச் 15: புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் கட்சி மேலிடம் இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போதைய எம்பி வைத்திலிங்கம் படத்துடன் நகரம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி தேர்தல் பிரசாரத்தை துவங்கிவிட்டனர். ஆனால் யாரை வேட்பாளராக போடுவது என தெரியாமல் பெரும் குழப்பத்தில் பாஜ திணறிவருகிறது. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் முதன்முதலாக காங்கிரஸ்- பாஜக இடையே பிரதான போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட காங்கிரசில் நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் வேட்பாளரை தேடி அலைய வேண்டிய பரிதாப நிலையில் தான் பாஜ உள்ளது.

பாஜவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவரை நிறுத்தினால் மட்டுமே காங்கிரசுக்கு நல்ல ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்த முடியும் என அக்கட்சியின் மாநில தலைமை கருதுகிறது. மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு செல்ல அவருக்கு விருப்பமில்லாததால் அவர் தனக்கு சீட் வேண்டாம் என மறுத்துவிட்டார். இதனால் தகுதியான வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் பாஜ திணறி வருகிறது. புதுச்சேரியில் தற்போது பாஜவுக்கு 6 எம்எல்ஏக்கள், 3 நியமன எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேட்சைகள் ஆதரவு என 12 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் என்ஆர் காங்கிரசின் ஆதரவும் உள்ளது.

புதுச்சேரியில் ஆளும் கட்சி என்ற அந்தஸ்து இருந்தும் தகுதியான வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் அக்கட்சி திணறி வருகிறது. 2 கட்ட வேட்பாளர் பட்டியலிலும் ஒரே ஒரு தொகுதியான புதுச்சேரி ெதாகுதிக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் பிரசாரத்தை இப்போதே தொடங்கி விட்டது. கடந்த 10 ஆண்டு கால மோடியின் ஆட்சியில் உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி பட்டியலை கடந்த கால மத்திய காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிட்டு மக்களை சிந்திக்க வைக்கும் வகையிலான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ், பாஜ கூட்டணி அரசு சட்ட ஒழுங்கை சரியாக கையாளாததால் சிறுமி கொடூர கொலை நடந்ததாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வந்தனர்.

காங். கட்சி மேலிடம் இன்னமும் வேட்பாளரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் கட்சியில் உள்ள 2ம் கட்ட நிர்வாகிகள் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தங்களது பகுதியில் போஸ்டர்களை ஒட்டி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். அதில் தற்போதைய சிட்டிங் எம்பி வைத்திலிங்கம் பெயர் மற்றும் படம் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஆளுங்கட்சிக்கு எதிரான பிரசாரங்களை தொடங்குவதற்கான முதல்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அடுத்து வரவுள்ள காங்கிரஸ் கட்சியின் 3ம்கட்ட பட்டியலில் புதுச்சேரி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் எதிர்பார்த்துள்ளனர். வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் காங்கிரசின் பிரசாரம் இன்னும் வேகமெடுக்கலாம் என்பதால் பாஜகவினர் கலக்கத்தில் உள்ளனர்.

The post கட்சி மேலிடம் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் புதுச்சேரியில் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் திணறும் பாஜ appeared first on Dinakaran.

Tags : BJP ,Puducherry ,Congress ,Vaithilingam ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...