×

வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் விரிவாக்க விழா சென்னையை நவீன நகரமாக்க வேண்டும்: அமைச்சர்கள், மேயர், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டளை

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தங்கசாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் விரிவாக்க விழாவில் ரூ.4181.03 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது: இங்கு அமர்ந்திருக்கும், அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர், துணை மேயர், அதிகாரிகள் என எல்லோருக்கும் நான் கூறிக் கொள்வது, சென்னை மாநகரை, இந்தியாவின் தலைசிறந்த மாநகரமாக, நவீன நகரமாக உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கவில்லை, கட்டளை இடுகிறேன். நானே தொடர்ந்து கண்காணிப்பேன்.

500 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை மாநகரத்தை நவீனமாக்கியதில் பெரும் பங்கு திமுகவுக்கு உண்டு. இடைக்காலத்தில், பத்து வருடம் பதவியில் இருந்தவர்கள் சென்னையை சீரழித்து, பாழ்படுத்தினார்கள். பத்து வருடம் கழித்து, இப்போது, மீண்டும் கழக ஆட்சி மாநிலத்திலும் உதயமாகி, நகர்ப்புற வளர்ச்சியில், அமைச்சர் நேரு மிக மிகச் சிறப்பாக இன்றைக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு துணையாக, சென்னை மாநகரத்தின் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் செயல்பட்டு வருகிறார்கள், ஏன் நம்முடைய கவுன்சிலர்களும் செயல்படுகிறார்கள்.

நம்மை பொறுத்தவரை, துயர் வரும் நேரம் துணை நிற்பது மட்டுமில்லை, துயர் துடைக்க புதிய திட்டங்களையும் உருவாக்கிக் கொண்டு வருகிறோம். சென்னை மீண்டும் புதுப்பொலிவு அடைந்து கொண்டு வருகிறது. இதற்காகவே தீட்டப்பட்டிருக்கின்ற சிறப்புத் திட்டம்தான் ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம். திராவிட மாடல் அரசின் கடந்த பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் அறிவித்தோம். ஆனால், வடசென்னையின் மக்கள் தொகை, இடப்பற்றாக்குறை, மக்கள் நெரிசல், போக்குவரத்து நெரிசல், இந்தப் பகுதி மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகள், இதையெல்லாம் மனதில் வைத்து, இன்றைக்கு அந்தத் தொகையை நான்கு மடங்கு உயர்த்தி, 4 ஆயிரத்து 181 கோடி ரூபாய் மதிப்பில், 11 அரசுத் துறைகளுடன் இணைந்து, வட சென்னை வளர்ச்சிக்கு இந்த மெகா திட்டம் செயல்பட போகின்றது.

இந்த திட்டத்தின்கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் திட்டங்களுக்கு ரூ.440 கோடியே 62 லட்சம், இதர துறைகளின் திட்டங்களுக்கு, ரூ.886 கோடியே 46 லட்சம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒதுக்கீடு செய்யும். மீதமுள்ள நிதியை அந்தந்த துறைகள், வாரியங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடுகள் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த திட்டத்தில் என்னென்ன செய்யப் போகிறோம்? மாதிரிப் பள்ளிகளை உருவாக்குதல், குறைந்த விலையில் வீட்டுவசதி, திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்குதல், புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள நிர்மாணித்தல், மேம்படுத்துதல், முக்கியமான பகுதிகளில் துணை மின் நிலையங்கள், போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் மறுவாழ்வு மையம், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள், மருத்துவச் சுகாதார நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான உயர்சிறப்புப் பிரிவு, தரமான குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்படும்.

இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள், பொதுப் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சந்தைகள், சலவை செய்யுமிடம் மற்றும் டயாலிசிஸ் மையங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் வடசென்னை முழுக்க முக்கியமான இடங்களில் நிறுவப்படும். இன்னும் இருக்கிறது. ரூ.640 கோடி செலவில், கொடுங்கையூரில் உயிரி சுரங்கத் திட்டம், ரூ.238 கோடி செலவில் இரண்டு பெரிய பாலங்கள், ரூ.80 கோடி தணிகாசலம் கால்வாய் புனரமைப்புத் திட்டம் ரூ.823 கோடி செலவில் பாரிமுனை பேருந்து முனையம் மறுகட்டுமானம், 15 இடங்களில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 7 ஆயிரத்து 60 சேதமடைந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 9 ஆயிரத்து 798 புதிய குடியிருப்புகள் ஆயிரத்து 567 கோடியே 68 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் போகிறோம்.

இப்படி, இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்ற 87 திட்டங்கள் உட்பட அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் முடிவுறுகிற போது, வடசென்னையின் வரலாற்றில், ஒரு புதிய சகாப்தத்தை திமுக எழுதியிருக்கும். சென்னையை உயர்த்த நாள்தோறும் புதிய புதிய திட்டங்களாக நிறைவேற்றுகிறது. சென்னை வெள்ளத்தில் மிதந்த போது, மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக்குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்த போது மக்களைப் பார்க்க வராத பிரதமர், ஓட்டு கேட்டு மட்டும் வருவது நியாயமாக இருக்கிறதா? குஜராத்துக்கு அன்றைய தினமே நிதி தருவதும், தமிழ்நாட்டிற்கு மூன்று மாதம் சென்ற பிறகும் நிதி தர மனதில்லாமல் போவதும் ஏன்? இதை கேட்டால், நம்மை பிரிவினைவாதி போல் பேசுகிறார்கள்.

பிரிவினை எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்று தான் கேட்கிறோம். தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு, தமிழ்நாட்டு மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும். இது என்ன நியாயம்? ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கேட்கிறார்கள்? “பதில் கூறுங்கள் பிரதமர் அவர்களே” தமிழ்நாட்டை சீரழித்த அதிமுகவையும், தமிழ்நாட்டை கண்டுகொள்ளாத ஒன்றிய பாஜகவையும் மக்கள் நிராகரிக்க தயாராகிவிட்டார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக, இந்தியாவையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழ்நாட்டு மக்களான நமக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதற்கு துணை நிற்க, உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். தமிழ்நாட்டை வளர்ப்போம், இந்தியாவை காப்போம். மேலும் ரூ.4181.03 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* தேசபக்தியை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டியதில்லை
தேசபக்தியை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டியது அவசியம் இல்லை. நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. சீன நாட்டில் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, 1962ல், திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா. 1971ல் இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்திய போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பை கண்டித்து, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி, 1972ல் பாகிஸ்தான் போரின் போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கியவர் முதல்வர் கலைஞர், 1999ல் கார்கில் போரின் போது, அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் ரூ.50 கோடி வழங்கிய அரசும் முதல்வர் கலைஞரின் அரசுதான். இந்தியாவைக் காப்பதற்கு எங்களை ஒப்படைத்துக் கொண்டவர்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

The post வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் விரிவாக்க விழா சென்னையை நவீன நகரமாக்க வேண்டும்: அமைச்சர்கள், மேயர், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டளை appeared first on Dinakaran.

Tags : North Chennai Development Project Expansion Ceremony ,Chennai ,Chief Minister ,M.K.Stal ,Tamil Nadu ,M.K.Stalin ,Thangasalai, Chennai ,Ministers ,Nehru ,Shekhar Babu ,Mayor ,Deputy Mayor ,CM ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...