×

போதைப் பொருள் தடுப்பு விவகாரத்தில் அவதூறு எடப்பாடி, அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் தாக்கல் செய்த மனு: கடந்த மாதம் 8ம்தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதை தடுக்க அரசும், முதல்வரும் தவறிவிட்டனர் என்று உண்மைக்கு முரணான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. போதை பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கஞ்சா இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதை பொருள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் மத்தியில் போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமை தொகை, மாணவர்களுக்கு காலை உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மக்களிடம் முதல்வருக்கு உள்ள மரியாதையை கெடுக்கும் வகையிலும் எடப்பாடி பழனிசாமி அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளார். இது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ்(அவதூறு பரப்புதல், அவதூறு வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்கு உரிய கிரிமினல் குற்றம். எனவே முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி கருத்துகளை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த மாதம் 29ம்தேதி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதை பொருள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அனைத்துமே பொது வெளியில் சர்வசாதாரணமாக கிடைக்க ஆரம்பித்திருக்கிறது என்பது உள்ளிட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த அறிக்கை தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் மக்களிடையே உள்ள நன்மதிப்பை கெடுக்கும் வகையில் உள்ளது. தமிழக முதல்வர் தமிழகத்தை கஞ்சா பயிரிடப்படாத மாநிலமாக மாற்றி வருகிறார்.

ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் கஞ்சா வருவதை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடுமையான நடவடிக்கையும் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். போதை பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மக்களிடையே பொய்யான கருத்துகளை அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

* இபிஎஸ் மீது ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு
திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், போதைப்பொருள் தொடர்பான சமீப நிகழ்வுகளில் திமுகவை தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிசாமி கடந்த 8ம் தேதி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அவர் தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதை தடுக்க அரசும், முதல்வரும் தவறிவிட்டனர் என்று உண்மைக்கு முரணான கருத்துக்களை தெரிவித்துள்ளார். எடப்பாடியின் இந்த கருத்து தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. போதைப்பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு உள்ளது. எடப்பாடியின் இந்த பேட்டியால் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி நடந்துள்ளது. எனவே, உண்மைக்கு முரணாக, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இது குறித்து எடப்பாடி பேச தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

The post போதைப் பொருள் தடுப்பு விவகாரத்தில் அவதூறு எடப்பாடி, அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Annamalai ,Court ,Chennai ,Municipal ,Government ,Advocate ,G. Devarajan ,Chennai Principal Sessions Court ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Tamil Nadu ,Edappadi ,M.K.Stalin ,Principal Sessions Court ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...