×

42வது முறையாக முத்தமிட்ட மும்பை: 2வது இடம் பிடித்த விதர்பா

மும்பை: ரஞ்சி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 41முறை சாம்பியன் மும்பை அணி 48வது முறையாகவும், 2முறை சாம்பியனான விதர்பா 3வது முறையாகயும் களம் கண்டன. மும்பையில் மார்ச் 10ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் மும்பை 224, விதர்பா 105ரன்னில் ஆட்டமிழந்தன. முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை மும்பை தொடங்கியது. அந்த அணி 3வது நாளான நேற்று முன்தினம் 130.2ஓவரில் 418ரன் குவித்தது.

அதனால் மும்பை 537ரன் முன்னிலைப் பெற்று வலுவான நிலையை பெற்றது. தொடர்ந்து 538ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்ட விதர்பா 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 92ஓவரில் 5விக்கெட்களை இழந்த விதர்பா 248ரன் எடுத்திருந்தது. இன்னும் 290ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி நாளான நேற்று விதர்பா வீரர்கள் கேப்டன் அக்‌ஷய் வட்கர் 56, ஹர்ஷ் துபே 11ரன்னுடன் 2வது இன்னிங்சை தொடர்ந்தனர்.

பொறுப்பாக போராடி இருவரும் 6வது விக்கெட்டுக்கு 130ரன் குவித்தனர். சதம் விளாசிய அக்‌ஷய் 102ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் ஹர்ஷ் 65ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது விதர்பா 7 விக்கெட் இழப்புக்கு 355ரன் எடுத்திருந்தது. ஆனால் அடுத்து வந்தவர்கள் குறைந்த ரன்னில் பெவிலியன் திரும்ப விதர்பாவின் போராட்டம் வீணானது. அந்த அணி 134.3ஓவரில் 368ரன் மட்டுமே சேர்்க்க மும்பை 169ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

மும்பை வீரர்கள் தனுஷ் கோடியன் 4, முஷீர் கான், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2, ஷாம்ஸ் முலானி, தவால் குல்கர்னி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக முஷீர்கானும், போட்டியின் தொடர் நாயகனாக தனுஷ் கோடியனும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் அஜிங்சிய ரகானே தலைமையிலான மும்பை 42வது முறையாக ரஞ்சிக் கோப்பையை வசப்படுத்தி உள்ளது. ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் சாம்பியனான மும்பை, அதிக முறை மட்டுமல்ல, இரட்டை இலக்க எண்ணிக்கையில் கோப்பையை வென்ற ஒரே அணியாகவும் திகழ்கிறது. கூடவே 2016ம் ஆண்டுக்கு பிறகு ரஞ்சி கோப்பையை மும்பை மீண்டும் முத்தமிட்டுள்ளது.

The post 42வது முறையாக முத்தமிட்ட மும்பை: 2வது இடம் பிடித்த விதர்பா appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Vidarbha ,Ranji Cup Test Cricket ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!