×

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி தேர்தல் ஆணைய இணையதளத்தில் தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு: பாஜவுக்கு குவிந்த ரூ.11,562 கோடி நிதி; எஸ்.பி.ஐ தந்த அரைகுறை பட்டியலால் குழப்பம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் பத்திரம் தொடர்பாக தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. இதில் பாஜ கட்சி அதிகபட்சமாக ரூ.11,562 கோடி நன்கொடை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், எந்த கட்சிக்கு யார் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என தெளிவாக இல்லாமல் எஸ்பிஐ தந்திருக்கும் அரைகுறை பட்டியலால் குழப்பமே எஞ்சியிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதற்காக தேர்தல் பத்திரம் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு கடந்த 2018ம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது.

இதன்படி, எஸ்பிஐ வங்கி சார்பில் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடிக்கான தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் ஆயுட்காலம் 15 நாட்கள் மட்டுமே. அவற்றை பொதுமக்கள், நிறுவனங்கள் வாங்கி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுக்கலாம். அவ்வாறு தரப்பட்ட பத்திரங்களை அரசியல் கட்சிகள் 15 நாட்களில் எஸ்பிஐ வங்கியில் செலுத்தி பணமாக்கலாம். இதில் நன்கொடை அளிப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். நன்கொடை பெறும் கட்சிகளுக்கு கூட யார் நிதி தந்தார்கள் என்பது தெரியாது.

இந்த நடைமுறை குறித்து ஆரம்பத்திலேயே உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதற்கு ஏற்றார் போல், தேர்தல் பத்திரம் மூலம் ஒன்றியத்தில் ஆளும் பாஜ கட்சி மட்டுமே பெரிய அளவில் நன்கொடை பெற்றது. இது இன்னும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் இதுவரை தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதி தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய எஸ்பிஐ மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் மார்ச் 12ம் தேதி மாலை பணி நேரம் முடிவதற்குள் தகவல்களை வழங்க உத்தரவு பிறப்பித்தது. அத்தகவல்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15ம் தேதிக்குள் தனது இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.

அதன்படி, எஸ்பிஐ வங்கி தரப்பில் கடந்த 2019 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 15ம் தேதி வரையிலான தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணையத்தில் கடந்த 12ம் தேதி தரப்பட்டது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி நேற்று முன்தினம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மேற்கூறிய காலகட்டத்தில் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டிருப்பதாகவும் கூறியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி தந்த தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் ஒருநாள் முன்பாக நேற்றிரவே தனது இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டது. இது 2 அறிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஒரு அறிக்கையில், எந்த நிறுவனம், எந்த தேதியில், எவ்வளவு நிதிக்கான தேர்தல் பத்திரம் வாங்கியது என்கிற தகவலும் மற்றொரு அறிக்கையில், எந்த கட்சி, எந்த தேதியில், எவ்வளவு நிதியை தேர்தல் பத்திரம் மூலம் பணமாக்கியது என்கிற தகவலும் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

இதில், கடந்த 2109ம் ஆண்டு கடந்த மக்களவை தேர்தல் நடந்த போது பாஜ தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகளை குவித்திருப்பது தெரியவந்துள்ளது. ரூ.1 கோடி மதிப்பிலான 1869 பத்திரங்கள் பாஜவுக்கு நன்கொடையாக தரப்பட்டுள்ளன. இதுதவிர ரூ.10 லட்சத்திற்கான பத்திரங்கள் 1201, ரூ.1 லட்சத்திற்கான பத்திரங்கள் 560 பாஜ பணமாக்கி உள்ளது. இதன் மூலம் ரூ.1994 கோடி வரையிலும் கட்சி நிதி திரட்டி உள்ளது. இந்த பத்திரம் மூலம் பாஜ கட்சி மட்டுமே ரூ.11,562 கோடி நிதி திரட்டி உள்ளது. தேர்தல் பத்திரம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து எஸ்பிஐ வங்கி 30 தவணைகளில் ரூ.16,518 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிக நிதி பெற்ற கட்சிகள் பட்டியலில் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.3,214 கோடியுடன் 2வது இடத்திலும், காங்கிரஸ் 2,818 கோடியுடன் 3வது இடத்திலும் இருப்பதாக உண்மை கண்டறியும் நிபுணர் முகமது ஜூபைர் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார். அதே சமயம், எந்த நிறுவனம், எந்த கட்சிக்கு, எவ்வளவு நிதி தந்தது என்பது போன்ற தகவலை எஸ்பிஐ வங்கி தராமல், தனித்தனியாக பத்திரம் வாங்கப்பட்ட விவரம், பத்திரத்தை கட்சிகள் பணமாக்கிய விவரம் என அரைகுறையாக தந்திருப்பதால் இந்த தகவல்கள் குழப்பத்தையே தந்துள்ளன. அதானி, அம்பானி போன்ற பெரு நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை தரவில்லை என்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* ஒரு பத்திரம் கூட வாங்காத அதானி, அம்பானி
நாட்டிலேயே பாஜ ஆட்சியில் முழுக்க முழுக்க ஆதாரம் அடைந்தவர்கள் ஒரு சில தொழிலதிபர்கள்தான். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அதானியும், அம்பானியும். இவர்களுக்கான பாஜ ஆட்சியில் எவ்வளவு சட்ட திட்டங்கள் வளைக்கப்பட்டிருக்கின்றன என்பது நாடறிந்த விஷயம். அப்படியிருக்கையில், தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலில் அதானி, அம்பானியின் நேரடி நிறுவனங்கள் ஒரு தேர்தல் பத்திரத்தை கூட வாங்கியதாக பார்க்க முடியவில்லை. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* மக்களவை தேர்தல் தேதி இன்று வெளியீடு?
பிரதமர் மோடி தலைமையிலான அரசு நேற்று தேர்தல் கமிஷனர்கள் நியமனம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த அவசரத்தை பார்க்கும் போது இன்று மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் பத்திர ஆவணம்
* ரூ.2177 கோடி அதிக நிதி கொடுத்த லாட்டரி மார்டின்
அதிக அளவில் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ப்யூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சேவைகள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் ரூ.2,177 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான நிறுவனம் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக மேகா இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம் ரூ.980 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ வங்கியிடம் இருந்து வாங்கியுள்ளது.

* மொத்தம் 763 பக்கம்
தேர்தல் ஆணையம் நேற்று இரவு தனது இணையதளத்தில் மொத்தம் 763 பக்கங்கள் கொண்ட 2 ஆவணங்களை வெளியிட்டது. இதில் ஒன்றில் 337 பக்கங்களில் தேதி வாரியாக கம்பெனிகள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள் விவரம் வெளியிட்டிருந்தது. அதில் ஒவ்வொரு பத்திரத்தின் மதிப்பும் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு ஆவணத்தில் தேதி வாரியாக அரசியல் கட்சிகள் டெபாசிட் செய்த தேர்தல் பத்திரங்கள் தொகையுடன் இடம் பெற்றிருந்தது. இந்த ஆவணத்தில் மொத்தம் 426 பக்கங்கள் உள்ளன.

வெளிவராத தகவல்கள்
* தேர்தல் பத்திர எண்
* யார் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கினார்கள் என்ற தகவல்களை எஸ்பிஐ வங்கி தெரிவிக்கவில்லை.

தேர்தல் பத்திரம் அதிகம் வாங்கிய நிறுவனங்கள் பட்டியல்
ப்யூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் ரூ.2,177 கோடி
மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் ரூ.1,588 கோடி
ஹால்டியா எனர்ஜி லிமிடெட் ரூ.752 கோடி
வேதாந்தா லிமிடெட் ரூ.729.3 கோடி
குயிக் சப்ளை செயின் லிமிடெட் ரூ.658 கோடி
எஸ்ஸல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ரூ.449 கோடி
வெஸ்டர்ன்அப் பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் ரூ.440 கோடி
கெவென்டர் ஃபுட்பார்க் இன்ப்ரா லிமிடெட் ரூ.390 கோடி
மதன்லால் லிமிடெட் ரூ.347 கோடி
பாரதி ஏர்டெல் குழுமம் ரூ.330 கோடி
யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் ரூ.270.6 கோடி
உட்கல் அலுமினா இன்டர்நேஷனல் ரூ.270.6 கோடி
டிஎல்எப் குழுமம் ரூ.256.7 கோடி
எம்.கே.ஜே. என்டர்பிரைசஸ் லிமிடெட் ரூ.256.7 கோடி
தரிவால் இன்ப்ராஸ்டரக்சர்ஸ் ரூ.230 கோடி
பிர்லா கார்பன் இந்தியா ரூ.210 கோடி
சென்னை கிரீன் உட்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.210 கோடி
பி.ஜி.ஷ்ரைக் கன்ஸ்டரக்ஷன் டெக்னாலஜி லிமிடெட் ரூ.200 கோடி
இந்தியா ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் ரூ.196 கோடி
ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் ரூ.196 கோடி
ருங்டா சன்ஸ் ரூ.174 கோடி
டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டரீஸ் லிமிடெட் ரூ.160 கோடி
ஐஎப்பி அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ரூ.156.6 கோடி
பிராம்ப் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் ப்ராஜக்ட் ரூ.132 கோடி
சித்தார்த் இன்ப்ராடெக் அண்ட் சர்வீசஸ் ரூ.120.2 கோடி
என்சிசி லிமிடெட் ரூ.120 கோடி
இன்பினா பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.120 கோடி
எம்கேஜே என்டர்பிரைசஸ் லிமிடெட் ரூ.114.14 கோடி
டிவிஸ் லேபாரட்டரீஸ் லிமிடெட் ரூ.110 கோடி
யுனைடெட் பாஸ்பரஸ் இந்தியா எல்எல்பி ரூ.100 கோடி
அவிஸ் டிரேடிங் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.100 கோடி
நாட்கோ பார்மா லிமிடெட் ரூ.94.5 கோடி
பிசிபிஎல் லிமிடெட் ரூ.90 கோடி
எம்எஸ் எஸ்என் மொகான்டி ரூ.90 கோடி
நவ்யுகா இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் ரூ.90 கோடி
சஸ்மல் இன்ப்ராஸ்டரக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.88 கோடி
அரபிந்தோ பார்மா லிமிடெட் ரூ.88 கோடி
டிரான்ஸ்வே எக்சிம் பிரைவேட் லிமிடெட் ரூ.88 கோடி

* பாஜவுக்கு கொட்டிக் கொடுத்த கம்பெனிகள்
தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ள தரவுகளை ஆய்வு செய்து அதன் விவரங்களை டிவிட்டரில் உண்மை கண்டறியும் நிபுணரான முகமது ஜூபேர்(@zoo_bear) வெளியிட்டுள்ளார். அதன்படி பாஜவுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.11,562 கோடி நிதி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது. முகமதுஜூபேர், கடந்த குடியரசு தினத்தன்று தமிழ்நாடு அரசு வழங்கிய கோட்டை அமீர் சமூக நல்லிணக்க விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் விவரம்:
கட்சி பெற்ற நிதி(கோடிகளில்)
பாரதிய ஜனதா 11,562
திரிணாமுல் காங்கிரஸ் 3214
காங்கிரஸ் 2818
பாரத் ராஷ்டிர சமிதி 2278
பிஜூ ஜனதா தளம் 1550
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 662
தெலுங்கு தேசம் 437
சிவசேனா 316
ராஷ்டிரிய ஜனதா தளம் 147
ஆம் ஆத்மி கட்சி 130
மதசார்பற்ற ஜனதாதளம் 87
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 73
தேசியவாத காங்கிரஸ் 62
ஜன சேனா கட்சி 42
சமாஜ்வாடி கட்சி 28
ஐக்கிய ஜனதா தளம் 28
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 27
சிரோன்மணி அகாலி தளம் 14
அதிமுக 12.1
சிக்கிம் ஜனநாயக கட்சி 11
சிவசேனா 2
மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி 1.1
தேசிய மாநாடு 1
கோவா பார்வர்ட் கட்சி 0.7

* உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் நேற்று தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரிக்க உள்ளது. ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கை இன்று விசாரிக்க உள்ளதாக நேற்று இரவு உச்ச நீதிமன்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

* ரூ.500 கோடிக்கு மேல் பாஜவுக்கு அள்ளித்தந்த சீரம் நிறுவனம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜவுக்கு ரூ.6,000 கோடிக்குமேல் தாராள நிதி கிடைத்ததும், ஒன்றிய விசாரணை அமைப்புகள் பிடியில் சிக்கிய நிறுவனங்களிடம் இருந்து மட்டும் ரூ.300 கோடிக்கும் மேல் பாஜவுக்கு நிதியாக சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஒரு புறம் இருக்க, தேர்தல் புரூடண்ட் அறக்கட்டளை மூலமாக பாஜவுக்கு தாராள நிதி வந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. பாஜ மூலம் பலன் அடைந்த நிறுவனங்கள் பாஜ அரசுக்கு நிதியை அள்ளித் தந்துள்ளன. குறிப்பாக கொரோனா காலத்தில் கோவிஷீல்டு தடுப்பு ஊசி தயாரித்த சீரம் நிறுவனம் ஒரே தவணையில் 2022 ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி ரூ.400 கோடி, 2ம் தேதி ரூ.100 கோடி 17ம் தேதி 2.5 கோடி என ரூ.502.5 கோடி நிதியை தேர்தல் புரூடண்ட் அறக்கட்டளை மூலம் வழங்கியுள்ளது. நிதி வழங்கிய சில நாட்களில் பிரதமர் மோடியை சீரம் நிறுவன அதிபர் ஆதார் பூனாவாலா சந்தித்துள்ளார்.

கொரோனா பரவலின்போது தினமும் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்துகொண்டிருந்தபோதும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது ஆத்ம நிர்பார் பாரத் மூலம் உள்நாட்டில்தான் தயாரிப்போம் என்ற முடிவை ஒன்றிய அரசு எடுத்தது. இந்த மருந்து உற்பத்தி பொறுப்பு சீரம் நிறுவனத்திடம் தரப்பட்டது. இதனால் சீரம் நிறுவனத்தில்தான் இவற்றை வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த பிரதிபலனுக்காகவே சீரம் நிறுவனம் மேற்கண்ட நிதியை வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதுபோல் எஸ்ஸார் குழுமத்தின் அபிநந்த் குரூப், ரூ.500 கோடி, ஆர்க்லார் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா ரூ.500 கோடி., அர்க்லார் மிட்டல் டிரைன் அண்ட் இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.500 கோடி, பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல் சர்வீசஸ் 2 தவணைகளில் ரூ.1,000 கோடி உட்பட பல நிறுவனங்கள் தாராள நிதி வழங்கியுள்ளன.

The post சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி தேர்தல் ஆணைய இணையதளத்தில் தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு: பாஜவுக்கு குவிந்த ரூ.11,562 கோடி நிதி; எஸ்.பி.ஐ தந்த அரைகுறை பட்டியலால் குழப்பம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court Order Election Commission ,Bajaj ,New Delhi ,Supreme Court ,Election Commission ,BJP ,Dinakaran ,
× RELATED கட்டுப்பாடுகளால் வாகன விலை 2 மடங்கு...