×

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோரையே நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு

டெல்லி: புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோரையே நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். புதிய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரிகளில் ஞானேஷ்குமாரும் இருந்தார். தேர்தல் ஆணையர் அருண் கோயலின் திடீர் ராஜினாமாவை அடுத்து, புதிய தேர்தல் ஆணையர்களாக இருவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த தேர்வுக் குழுவில், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர். இக்குழு இன்று காலை கூடி புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோரை தேர்வு செய்தது. இக்குழுவின் பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோரையே நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் – மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், புதிய சட்டப்படி இரண்டு தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், ஞானேஷ் குமார் கேரளாவையும், சுக்பிர் சிங் சாந்து பஞ்சாபையும் சேர்ந்தவர்கள். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான புதிய சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும். இக்குழுவில், மத்திய அமைச்சர் ஒருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

The post புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோரையே நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Tirupati Murmu ,Gnaneshkumar ,Sukbirsingh Sandhu ,Delhi ,President ,Sukbirshing Sandhu ,Gnanesh Kumar ,Kerala Division IAS ,Kashmir ,Dinakaran ,
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...