×

ராசிபுரம் கோனேரிப்பட்டி ஏரியில் தீவிபத்து: மரங்கள் கருகியது

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேந்தமங்கலம் செல்லும் சாலையில் கோனேரிப்பட்டி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கோனேரிப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளது. மேலும் மயில், கொக்கு, நீர் பறவைகள் உள்ளிட்ட பறவைகளும் இருந்தன. இந்தநிலையில் நேற்று இரவு ஏரியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அங்கிருந்த கருவேல மரங்களுக்கும் தீ பரவி சுமார் 20 அடி உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி அவ்வழியாக சென்றவர்கள் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் மரங்கள் அனைத்தும் கருகிறது. மேலும் ஏரியில் இருந்த 100க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறினர். இந்த ஏரிக்கரையில் கோழிக்கழிவுகள், குப்பை கழிவுகள், உணவு விடுதியில் உள்ள கழிவுகள் கொட்டப்படுகிறது. அவ்வாறு கொட்டப்படும் கழிவுகளுக்கு மர்மநபர்கள் தீவைப்பது வழக்கம். அவ்வாறு தீவைத்த போது அந்த தீ பரவி ஏரியில் முழுவதும் தீப்பறியதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகராட்சி சார்பில் ஏரியை தூய்மைப்படுத்தி நடைபாதை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ள நிலையில் அங்கு தீவைப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ராசிபுரம் கோனேரிப்பட்டி ஏரியில் தீவிபத்து: மரங்கள் கருகியது appeared first on Dinakaran.

Tags : Rasipuram Koneripatti Lake Fire ,Rasipuram ,Koneripatti ,Public Works Department ,Senthamangalam ,Namakkal district ,Rasipuram Koneripatti Lake ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து