×

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக நந்தம்பாக்கம் பகுதிகளில் மே மாதம் முதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல், நந்தம்பாக்கம் மெட்ராஸ் போர் கல்லறை, பட் ரோடு மற்றும் பால் வெல்ஸ் ரோடு ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ இரயில் பணிகளுக்காக தற்காலிக போக்குவரத்து மாற்றம் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 118 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. வழித்தடம் 5-ல் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.), ECV-02 (உயர்மட்ட கட்டுமானம்) தொகுப்பு CMBT-லிருந்து தொடங்கி காளியம்மன் கோயில் தெரு, மவுண்ட்-பூந்தமல்லி சாலை, பட் ரோடு, உள்வட்டச் சாலை வழியாக மேடவாக்கம் பிரதான சாலையுடன் ஒன்றிணைந்து சோழிங்கநல்லூர் வரை தொடர்கிறது.

நந்தம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் போர் கல்லறை, பட் ரோடு மற்றும் பால் வெல்ஸ் ரோடு போன்ற சில இடங்களில் தற்போதுள்ள சாலையின் அகலம் குறுகலாக உள்ளதால், இந்த இடங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் போரூரில் இருந்து தற்காலிகமாக ஒருவழிப் போக்குவரத்தை திசை திருப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான காலி நிலத்தில் போர் கல்லறை, டிஃபென்ஸ் காலனி 1வது அவென்யூ, கண்டோன்மென்ட் சாலைகள், தனகோட்டி ராஜா தெரு, சிட்கோ தொழிற்பேட்டை தெற்கு சாலை, ஒலிம்பியா சந்திப்பு வழியாக இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான நிலத்தின் வழியாக பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலை போக்குவரத்து மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. இதனை ஏற்கனவே தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக நிறுவனம் மற்றும் கன்டோன்மென்ட் போன்ற பிற துறைகள் ஏற்றுக்கொண்டுள்ளன. பால்வெல்ஸ் சாலை மற்றும் பட் ரோடில் மெட்ரோ பணிகள் முடியும் வரை இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மாற்றத்திற்கான மேற்கண்ட நிலம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது புதர்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாலை மேம்பாட்டு பணிகள் 2 மாதங்களில் முடிக்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலை போக்குவரத்து மாற்றம் மே 2024 முதல் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக நந்தம்பாக்கம் பகுதிகளில் மே மாதம் முதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Nandambakkam ,Chennai ,Metro Rail ,Route ,Nandambakkam Madras War Cemetery ,Bhat Road ,Paul Wells Road ,
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...