×

செங்கல்பட்டு எஸ்பி அலுவலகம் அருகே ரூ.15 கோடி மதிப்பில் புதிய நவீன விளையாட்டு திடல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இன்று காலை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், ரூ.15 கோடி மதிப்பில் புதிய நவீன விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு அருகே வேண்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக ரூ.15 கோடி மதிப்பில் அதிநவீன விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இன்று காலை அப்பகுதியில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.15 கோடி மதிப்பில் 400 மீட்டர் ஓடுதளம், சர்வதேச அளவிலான கால்பந்து போட்டிகள் நடத்தும் வகையில் மைதானம், 50 மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளம், கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் இறகுப் பந்து போட்டிகள் மற்றும் பார்வையாளர்கள் அமரும் கேலரி வசதிகளுடன் கூடிய அதிநவீன விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

மேலும், கலைஞர் திட்டத்தின்கீழ் 33 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், மாவட்ட கலெக்டர் ச.அருண்ராஜ், எம்எல்ஏக்கள் செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், பல்லாவரம் இ.கருணாநிதி, திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, காஞ்சிபுரம் எழிலரசன், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டு எஸ்பி அலுவலகம் அருகே ரூ.15 கோடி மதிப்பில் புதிய நவீன விளையாட்டு திடல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu SP ,Minister ,Udayanidhi Stalin ,Chengalpattu ,Tamil Nadu Youth Welfare and Sports Development Department ,Superintendent ,Dinakaran ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...