×

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிக, புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம் கட்சி மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் சேர வாய்ப்புள்ளது. இந்த கட்சி தலைவர்கள் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனாலும், இவர்களுக்கு எத்தனை சீட், எந்த தொகுதி என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. தேமுதிகவுக்கு 5 நாடாளுமன்ற தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட் தந்தால் மட்டுமே அதிமுக கூட்டணியில் இடம்பெற முடியும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா உறுதிபட கூறி வருகிறார். ஆனால், அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி பதவி தர முடியாது என்று கூறி வருகின்றனர். இதனால் கடந்த ஒருவாரமாக அதிமுக – தேமுதிக இடையே பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். இந்தசூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் வந்தார். அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, தேமுதிக கேட்ட தொகுதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வரும் மாநிலங்களவை சீட் கொடுக்க வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் கட்சி நிர்வாகிகளிடம் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு தேமுதிக கட்சியுடன் 3வது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, அதிமுக கூட்டணியில் இடம்பெற உள்ள புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவது குறித்தும் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு விரைவில், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு பணியை நிறைவு செய்து கூட்டணி மற்றும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

The post கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMY ,ADAMUKA CONSTITUENCY PARTICIPATORY COMMITTEE ON CONSTITUENCY ALLOCATION FOR COALITION PARTIES ,Chennai ,Demudika ,New Tamil Nadu Party ,Revolution Bharatam Party ,SDBI ,Adimuka ,Extraordinary Constituency Participation Committee ,Edappadi Palanisami ,Supreme Constituency Participatory Committee ,Dinakaran ,
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்