டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வு அறிக்கையை ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்தது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு குழு அமைத்தது. அந்த குழு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்பட பல்வேறு தரப்பிடம் ஆலோசனைகளை மேற்கொண்டது.
இந்த குழு தற்போது ஆலோசனைகளை முடித்துக்கொண்டு அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்நிலையில் அந்த அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தாக்கல் செய்தது. 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் தாக்கம், பலன்கள் குறித்து அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமே. முன்கூட்டியே திட்டமிட்டால் சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வழி உள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம். 2029-ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களில் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றி அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
The post ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு appeared first on Dinakaran.