×

போதைப் பொருள் தடுப்பு விவகாரம்; எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு

சென்னை: போதை பொருள் நடமாட்டம் தொடர்பாக பொய்யான தகவல்களையும் அவதூறு கருத்துகளையும் வெளியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ பாஜ தலைவர் அண்ணாமலை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 8ம்தேதி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இதை தடுக்க அரசும், முதல்வரும் தவறிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்று கடந்த 8ம்தேதி பேட்டியளித்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்து தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. போதை பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு உள்ளது. கஞ்சா இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதை பொருள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மக்களிடம் முதல்வருக்கு உள்ள மரியாதையை கெடுக்கும் வகையிலும் எடப்பாடி பழனிச்சாமி அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ்(அவதூறு பரப்புதல், அவதூறு வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்கு உரிய கிரிமினல் குற்றமாகும். எனவே முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி கருத்துகளை வெயிட்ட எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, கடந்த மாதம் 29ம்தேதி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதை பொருள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அனைத்துமே பொது வெளியில் சர்வசாதாரணமாக கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. 33 மாத காலத்தில் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது’’ என்று தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் இந்த அறிக்கை தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் மக்களிடையே உள்ள நன்மதிப்பை கெடுக்கும் வகையில் உள்ளது.

தமிழக முதல்வர் தமிழகத்தை கஞ்சா பயிரிடப்படாத மாநிலமாக மாற்றி வருகிறார். ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் கஞ்சா வருவதை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடுமையான நடவடிக்கையும் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். போதை பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மக்களிடையே பொய்யான கருத்துகளை அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

The post போதைப் பொருள் தடுப்பு விவகாரம்; எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanichami ,Annamalai K. Stalin ,Chennai ,Chief Justice ,Edapadi Palanichami ,Chennai Primary Sessions Court ,K. Stalin ,Dinakaran ,
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...